உலக நாடுகளில் எதிர்வரும் பொருளாதார மந்த நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார ஆய்வறிஞர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
லே ஆஃப் எனப்படும் பணிநீக்கம்:
அதன் தொடர்ச்சியாக, மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை தங்களின் பணி ஆட்களில் 6 சதவிகிதம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்வதற்கான ஆட்கள் தேவை இருந்தது.
எனவே, இரண்டு ஆண்டு காலத்தில், இம்மாதிரியான நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தன. அதன் விளைவாக, நிறைய ஆட்களை இந்த நிறுவனங்கள் பணியில் சேர்த்தன. ஆனால், தற்போது பொருளாதாரம் சிக்கலை சந்தித்து வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
உலகெங்கும் பணிநீக்கம்:
சமீபத்தில், 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக கூகுள் அறிவித்தது. அதாவது, உலக அளவில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் இது 6 சதவிகிதம் ஆகும். பணி நீக்கத்தை பொறுத்தவரையில், அமேசான் நிறுவனம் பல்வேறு கட்டமாக மேற்கொண்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்து 300 பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தது.
அதேபோல, உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனம். கடந்த ஜுன் மாத விவரங்களின்படி, வாஷிங்டனை மையாமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில், உலகம் முழுவதும் 2 லட்சத்து 21 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவிகிதம் அதாவது 11 ஆயிரம் பேர் ஒரே அடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
தனிநபர் கணினி விற்பனையில் தொடர்ந்து பல காலாண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனம் சரிவில் உள்ளதன் காரணமாக, அதன் விண்டோஸ் மற்றும் மற்ற உபகரணங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்கள்:
இதனால், சந்தையில் தனது கிளை க்ளவுட் நிறுவனமான அசூர்-ன் வளர்ச்சியை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவினங்களை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் சுமார் ஆயிரம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமக ஏற்கனவே, ட்விட்டர், மெட்டா போன்ற பல பெருநிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன.
அதைதொடர்ந்து, சிஸ்கோ நிறுவனம் 4000 ஊழியர்களை வெளியேற்றியது. அதேபோன்று, ஓயோ நிறுவனமும் 600 பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. இவர்களில் பல பேர் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.