செய்தித் தொலைக்காட்சி சேனல்களில் ப்ரைம் டைம் என்கிற ரகம் உண்டு. இந்த நேரத்தில் செய்திகளைத் தொகுத்து வழங்குவதற்குப் பெரும்பாலும் அனுபவமிக்க செய்தியாளர்களே நியமிக்கப்படுவார்கள். இந்த வரிசையில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஓரினி கைப்பாரா என்னும் பெண் அந்த நாட்டின் செய்தித் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் நேர செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கிறீர்களா?. ஓரினி கைப்பாரா நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மாவ்ரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். மாவ்ரிகளுக்கே உண்டான டாட்டூ அவரது முகத்தில் இருக்கும். கடந்த 2017ம் ஆண்டில்தான் இவர் தான் மாவ்ரி பழங்குடியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தார். இதற்கிடையே மாவ்ரி பழங்குடியைச் சேர்ந்த முகத்தில் டாட்டூ வரைந்த முதல் பெண் செய்தி வாசிப்பாளர் ப்ரைம் டைமில் செய்திகளைத் தொகுத்து வழங்குவது இதுவே முதல்முறை.
மாவ்ரி பழங்குடியைச் சேர்ந்த பாலினேஷிய மக்கள், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு எனத் தனியே நாகரிகம் உண்டு. மனிதன் தோன்றிய ஆதிகாலத்தில் இருந்து வாழ்ந்து வரும் குடி என இவர்கள் அறியப்படுகிறார்கள். இதற்கிடையே இந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் முக்கிய நேரச் செய்திகளைத் தொகுத்து வழங்குவது அந்த பூர்வகுடிகளைப் பெருமையில் ஆழ்த்தியுள்ளது.