சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலகம் முழுவதும் 2020 மற்றும் நடப்பாண்டில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்டா, டெல்டா பிளஸ் என்று புதிய புதிய உருவெடுத்து வந்த கொரோனா வைரசின் புதிய வகை கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்கா நாட்டில் பி 1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலே இந்த வைரஸ்தான் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.






இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசியை தீவிரமாக எதிர்க்கும் ஆற்றல் கொண்டது ஆகும். வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த ஒமிக்ரான் வைரஸ், கொரோனா வைரசின் அறிகுறிகளை தீவிரமாக கொண்டதாகும். போட்ஸ்வோனா எனும் நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட இந்த வைரஸ் தாக்கியுள்ளதால் மருத்துவ வல்லுனர்கள் இந்த வைரஸ் மிகுந்த ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




தென்னாப்பிரிக்காவில் இருந்து இஸ்ரேல் திரும்பிய பயணி ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில், அவர் மற்றும் மேலும் இரண்டு பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்த பி.1.1.529 வைரஸ் கடந்த 9-ந் தேதிதான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அப்போது முதல் இந்த வைரசை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தென்னாப்பிரக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரசால் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற பயணி மட்டுமின்றி பெல்ஜியம், ஹாங்காங் நாடுகளுக்கு சென்ற பயணிகள் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனா வைரசினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது ஐரோப்பிய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண