உலகை ஆட்டிப்படைத்த கொரோனா:
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது.
சமீப காலமாகத்தான், கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதற்கிடையே, கடந்தாண்டு அக்டோபர் மாதம், ஒமைக்ரான் கொரோனாவிலிருந்து BA.5.1.7 என்ற துணை வகை உருமாறியது. இது, அதிக தீவிர தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதனால் பெரும் தாக்கம் ஏற்படவில்லை.
அச்சத்தை ஏற்படுத்தும் புதிய உருமாறிய கொரோனா:
இந்த நிலையில், மீண்டும் ஒரு உருமாறிய கொரோனா உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது வரை, இஸ்ரேல், டென்மார்க், அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதை தீவிரமாக கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது.
BA.2.86 என்ற இந்த புதிய வகை கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் தெரியவரவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தி அறிக்கையில், "அதிக எண்ணிக்கையிலான (30க்கும் மேற்பட்ட) மரபணு மாற்றங்கள் தென்படுவதால் புதிய வகை கொரோனாவை கண்காணித்து வருகிறோம். புதிய உருமாறிய கொரோனாவின் நான்கு தொடர்களை பற்றி மட்டுமே தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?
BA.2.86 வகை கொரோனாவின் சாத்தியமான தாக்கம் தற்போது அறியப்படவில்லை. இதை கவனமாக ஆய்வு செய்து வருகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய உருமாறிய வைரஸை தவிர்த்து 10 கொரோனா வகைகளையும் அதன் தோற்றத்தையும் உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது.
கடந்த ஜூலை 17 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 14 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2,300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்பான 28 நாள்களை ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், இறப்பு விகிதம் 56 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 13ஆம் வரையிலான நிலவரப்படி, உலகம் முழுவதும் 769 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் 6.9 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், பல வழக்குகள் கண்டறியப்படாததால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.