கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசில் இருந்து உருமாறிய ஒமைக்ரோன் போன்ற புதிய வகை கொரோனா விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருந்தன.
ஆனால், தொடர் ஆராய்ச்சியின் காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், புதிய வகை கொரோனா, புதிய வகை வைரசுகள் தோன்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அடையாளம் தெரியாத புதிய வகை உருமாறிய கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளனது.
பிசிஆர் சோதனையின் அதிர்ச்சி:
சமீபத்தில் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு நபர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையின் போது இந்த உருமாறிய கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் வகையின் இரண்டு துணை வகைகளை இந்த புதிய வகை உருமாறிய கொரோனா உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த புதிய வகை உருமாறிய கொரோனா உலகில் வேறு எங்கும் கண்டறியப்படவில்லை. இரண்டு பேரை பாதிப்புக்குள்ளாக்கிய இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவால் லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. காய்ச்சல், தலை வலி, தசை வலி போன்றவை ஏற்படுகிறது. எனவே, தனிப்பட்ட மருத்துவ தேவை இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்புகள் என்னென்ன?
இதுகுறித்து இஸ்ரேல் பொது சுகாதாரத்துறையின் தலைவரும் மருத்துவருமான ஷரோன் அல்ராய் ப்ரெயிஸ் கூறுகையில், "இரண்டு துணை வகைகள் சேர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரிந்த ஒன்றே. தற்போதைக்கு, இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவால் தீவிரமான பாதிப்புகள் எதுவும் இல்லை" என்றார்.
இஸ்ரேலின் 9.2 மில்லியன் மக்கள்தொகையில், நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே மூன்று டோஸ் கோவிட் தடுப்பூசியை செலுத்து கொண்டுள்ளனர். இன்றுவரை, நாட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில், 8,244 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், தடுப்பூசி போடப்படாத சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலின் பிரதமர் நஃப்தலி பென்னட் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து, கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், நாடு தழுவிய தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.
இருப்பினும், ஒமைக்ரான் பரவல் காரணமாக, 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இஸ்ரேன் நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது. சில நாட்களுக்குள் மீண்டும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.