விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் இவ்வாறு  பைத்தியகாரத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திருடர்களே என அவர் விமர்சித்துள்ளார்.இவ்வாறு ஊடகங்களுக்கு பதில் அளித்துள்ள சரத் பொன்சேகா  தற்போதைய இலங்கை அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பிரபாகரன் இருந்திருந்தால் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்திருக்கும் என கூறியுள்ளார். இலங்கை அரசியல்வாதிகள் பதவிக்காக தற்போது பைத்தியக்காரர்களைப் போல செயல்படுவதாகவும் பிரபாகரன் என்றொருவர் இருந்திருந்தால் நிலைமையே வேறு மாதிரி இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒருவேளை பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் இப்படி மேலும் கீழும் குதித்து பைத்தியக்காரர்களைப் போல் நடந்து கொள்ள மாட்டார்கள் என சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களை சரி செய்யாமல் பதவியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டால், இந்த நாடு வறியவர்கள் இருக்கும் நாடாக தொடர்ந்து இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டுக்காக தாம் செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலன்கள் இதுவரை கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து இருக்கும் சரத் பொன்சேக்கா நாட்டை கட்டி எழுப்ப போராடாமல் இந்த அரசியல்வாதிகள் பதவிக்காகவும் கட்சிக்காகவும் நடந்து கொள்ளும்  விதம் பற்றி செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


தான் அதிபர் பதவிக்கோ பிரதமர் பதவிக்கோ போட்டியிடவில்லை என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா  நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் திருட்டு அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளார்.




பிரபாகரன் மட்டும் இருந்திருந்தால் இந்த அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொண்டிருப்பார்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார். தமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மூவர் இந்த அதிபர், பிரதமர்  பதவிக்கு போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள சில அரசியல் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகள்  சிலரின் நடவடிக்கைகளை தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


செய்தியாளர்களிடம் வெளிப்படையாகவே பேசி இருக்கும் சரத்பொன்சேகா தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ராஜபக்சவினரின் சுதந்திர கட்சி யாருக்குமே வாக்களிக்காமல் நடுநிலையாக இருப்பது நல்லது எனவும் , அது நல்ல தலைவர்களை நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாவது கட்சித் தலைவர்களை மடக்கி இந்த திருட்டு அரசியல்வாதிகள் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் தான் முனைப்பு காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


 
நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவான வாக்குகள் சுமார் 150 வாக்குகள் இருப்பதாக சரத்பொன்சேகா  சுட்டி காட்டியுள்ளார்‌. தற்போது அந்தக் கட்சிக்குள்ளும் அதிபர் பதவி விஷயத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் இருதரப்புகளாக பிரிந்து இருப்பதாகவும், வாக்குகள் ஒரு தரப்புக்கு அதிகமாகவும் ஒரு தரப்புக்கு குறைவான அளவில் வாக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். வாக்குகள் சரிசமமாக பிரிந்தால்  மட்டுமே சஜித் பிரேமதாசவுக்கு அது சாதகமாக அமையும் எனவும் அதுவும் நியாயமாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஒருவேளை ரணில் விக்ரமசிங்க அதிபராக தேர்வாகி,  பிரதமர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அது இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 19 வது திருத்தச் சட்டத்தின் படி, அதிகார மாற்றங்களை செய்து பகிர்ந்து அளிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திருடர்கள் எனவும் நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை அழித்து விட்டார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் இன்னும் இந்த அரசியல்வாதிகளின் பின்னால் உள்ள திருட்டுத்தனத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். மக்களின் இந்தப் போராட்டத்தின் மூலம் முழுமையான மாற்றம் நாட்டில் ஏற்படுமா என்பதில் சந்தேகமே என சரத்பொன்சேகா  குறிப்பிட்டுள்ளார். சிறந்ததொரு நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும், பதவி தனது நோக்கம் இல்லை எனக் கூறியுள்ள சரத்பொன்சேகா,  12 ஆண்டுகள் பதவி ஆசை இல்லாமல் தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.


ராணுவத்தை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்குவதற்கு இது 1989 ஆம் ஆண்டு அல்ல என ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ள வேண்டுமென சரத் பொன்சேக்கா தெரிவித்திருக்கிறார். இவற்றை  தற்போது உள்ள உலகம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தவறான அரசியல் கலாச்சாரமே இன்று நாட்டை  சீரழித்திருப்பதாக சரத்பொன்சேகா கூறியுள்ளார். ஆகவே மக்கள் முன்னெடுத்து உள்ள இந்தப் போராட்டமானது சிறந்ததொரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதையே தானும் எதிர்பார்த்து இருப்பதாக அவர் கூறப்பட்டுள்ளார்.