ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நெதர்லாந்தில் பிரதமர் எளிமையாக தமிழர் ஒருவருடன் பேசி சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.




 நம்ம ஊரு கவுன்சிலர்களை பார்க்கவே அப்பாய்ண்மெண்ட் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் நெதர்லாந்து நாட்டின் பிரதமர் சாதாரண குடிமகன் போல, எந்தவொரு அலப்பறையும் இல்லாமல் காய்கறி வாங்கி செல்லும் சம்பவம் நமக்கு சற்று ஆச்சர்யமான விஷயம்தான் . நெதர்லாந்தில் உணவி விடுதி ஒன்றை நடத்தும் கணேஷ் என்னும் தமிழ்நாட்டுக்காரர், யூடியூப் பக்கத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கடை ஒன்றிற்கு வீடியோ எடுத்துக்கொண்டே சென்ற அவர், எதிர்பாராத விதமாக சூப்பர் மார்கெட்டில் காய்கறி வாங்க வந்த நெதர்லாந்து நாட்டு பிரதமர் மார்க் ருட்டேவை சந்திக்கிறார். அவரிடம் சென்று சாதாரண மனிதரிடம் பேட்டி காண்பது போல பேசுகிறார் கணேஷ்.






 


 


 


முதலில் வீடியோ எடுப்பதை கண்டு தயக்கம் காட்டும் பிரதமர் மார்க் , “நான் அவசரமாக காய்கறி வாங்கி செல்கிறேன் “ என சிரித்துக்கொண்டே கூற, கணேஷ் தன்னை அறிமுகப்படுத்துகிறார், தான் செய்யும் வேலையையும், நெதர்லாந்து நாட்டையும் புகழ்ந்து சொல்ல, “அதை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன் “ என்கிறார் பிரதமர்.  சில வினாடிகள் அவருடன் நின்று பேசிய பின்னர் பின்னர் நீங்கள்  எந்த நாடு என கேட்க “நான் இந்திய நாட்டை சேர்ந்தவன் “ என்கிறார் கணேஷ். “ஓ! எனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும் “ என அங்கிருந்து பேசிக்கொண்டே கடந்து செல்கிறார்.


 



 


இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கணேஷ் , இங்குள்ள மனிதர்களுக்கு இது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும்  இந்தியர்களான நமக்கு இது சற்று ஆச்சர்யமளிக்கும் விஷயம்தானே என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தான் வேகமாக செல்லும் பொழுது கையில் வைத்திருந்த காபி குவளையை கீழே சிந்திவிட்டார்  பிரதமர் மார்க். அதனை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் , தானே சுத்தம் செய்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.