பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்களின் வாக் அவுட் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நெட்ஃபிளிக்ஸில் மிகப்பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியை தேவ் சாப்பல் (dave chappelle) என்னும் காமெடியன் செய்து வருகிறார். ஏற்கனவே இவரின் ஐந்து ஸ்டாண்ட் அப் காமெடி பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அதாவது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இவரின் ’தி க்ளோசர்’ என்னும் பெயரிலான ஸ்டாண்டப் காமெடி வெளியானது. அந்த நிகழ்ச்சியில் LGPTQ சமூகத்தை சார்ந்த மக்களை இழிவுபடுத்தும் விதமாக காமெடி செய்ததாக விமர்சனங்கள் எழவே, இதனை எப்படி தயாரிப்பு நிர்வாகம் ஏற்றுக்கொண்டார்கள் என நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்கள் மத்தியிலேயே சலசலப்பு ஏற்பட்டது. உடனே இதற்கு கண்டனம் தெரிவித்து நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி ‘வாக் அவுட்’ என்னும் கண்டன பிரச்சாரத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தது.
இதற்கான தலைமை பொறுப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ் பிரிவு தலைவராக இருக்கும் கர்ப்பிணியாக இருக்கும் பெண் (பெயர் வெளியாகவில்லை) ஏற்றதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளனர். அவர் LGPTQ சமூகத்தை ஆதரித்தார் என்பதற்காகவும் அவர் ஒரு கறுப்பின பெண் என்பதால்தான் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் துணிச்சலாக இப்படியான செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக , அப்பெண்ணின் ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.ஆனால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் வேறு என்கிறார் நெட்ஃபிளிக்ஸ் செய்தித்தொடர்பாளர். அதாவது மிகவும் ரகசியமாக பாதுகாப்பட வேண்டிய சில நிர்வாக தகவல்களை அப்பெண் பத்திரிக்கையாளர்களிடம் கொடுத்ததாகவும் , அது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் நெட்ஃபிளிக்ஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது. தற்போது நெட்ஃபிளிக்ஸின் LGBTQ ஊழியர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்காவின் லாஸ் எஞ்சலஸ் பகுதியில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என சமூக வலைத்தள வாசிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி "“trans lives matter" ,"black lives matter ", "we like jokes" ”black trans lives matter" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூட்டத்தில் ஒருவர் காமெடியன் தேவ் சாப்பலை ஆதரித்து பதாகை ஒன்றை ஏந்தி வந்தும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.