நேபாளத்தில் வெளிநாட்டியினர் உள்ளிட்ட 22 பேருடன் புறப்பட்ட விமானம், திடீரென மாயமானதாக தகவல் வெளியானது. இந்தியர்கள், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் தவிர 15 நேபாளிகள் உள்ளிட்டோர் அதில் பயணம் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் பறந்து கொண்டிருந்த விமானம், நொறுங்கி விழுந்தது உறுதி செய்யப்பட்டது.
சிறிய ரக விமானம் என்பதால், விழுந்த மாத்திரத்தில், அதன் பாகங்கள் மலைப்பகுதியில் சிதறின. இதில் பயணித்த பயணிகளும் விமான பாகங்களைப் போல உடல் சிதறி விழுந்தனர். உடனடி சம்பவ இடத்திற்கு விரைந்த நேபாள நாட்டு ராணுவம், 15 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 14 ஆயிரத்து 500 அடியில் விபத்து நடந்ததாக கூறப்பட்ட நிலையில், 11 ஆயிரம் அடியில் இறங்கிய நேபாள ராணுவ மீட்பு குழுவினர், தொடர்ந்து தேடி வந்தனர். விமானம் நொறுங்கிக் கிடந்த இடத்தை நெருங்கிய அவர்கள், அங்கு சடலங்கள் சிதறிக் கிடப்பதை கண்டுள்ளனர்.
இதுவரை 14 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8 சடலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், அடையாளம் காண முடியாத சூழல் உள்ளதாகவும், உடல் பாகங்களை மீட்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இரு இந்தியர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
மீட்புப்பணியில் ஈடுபட்ட காத்மாண்ட் திரிபுவான் சர்வதேச விமான நிலைய டெக்நாத் சிதாவுலா கூறுகையில், ‛‛விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் சடலங்கள் சிதறிக்கிடப்பதால், அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. இருப்பினும் எஞ்சியுள்ளோரின் சடலங்களையும் மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். விமானத்தின் பாகங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. மீட்கப்பட்டுள்ள சடலங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதுவரை 14 பேர் உயிரழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது; யாரும் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லை’’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் மோசமான வானிலையே காரணமாகவே இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்த பிறகே முழுவிபரம் தெரியும் என்பதால், கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.