அமெரிக்காவின் சவுத் கரோலினாவைச் சேர்ந்த 22 வயதான டாய் ஃபாக்ஸ் டெரியர் என்ற இனத்தை சேர்ந்த நாய் கின்னஸ் குழுக்களால் அங்கீகரிக்கப்பட்டு உலகின் மிகவும் வயது அதிகமான நாய் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. ‘பெப்பிள்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு தற்போது வயது 22 வயது 60 நாட்கள் ஆகும்.
பெப்பிள்ஸ் உரிமையாளர்களான பாபி மற்றும் ஜூலி கிரிகோரி, அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலகிலேயே மிகவும் வயதான நாய் என்ற பட்டம் பெற்ற டோபிகீத் பற்றிய செய்தியை அறிந்துள்ளனர். இதையடுத்து, ஜூலி கிரிகோரி தாங்கள் வளர்க்கும் பெப்பிள்ஸ் நாயின் வயதை கணக்கிட்டுள்ளனர். அப்பொழுது டாய் ஃபாக்ஸ் டெரியர் என்ற இனத்தை சேர்ந்த பெப்பிள்ஸ்க்கு 22 வயது என தெரியவந்தது.
தொடர்ந்து, உலகின் மிகவும் வயது அதிகமான நாய் என்ற கின்னஸ் பட்டம் பெற்ற டோபிகீத்தை விட தாங்கள் வளர்க்கும் நாய் அதிக வயதுடையது என்று கின்னஸ் சாதனை குழுக்களுக்கு செய்தி அனுப்பினேன் என்று ஜூலி கிரிகோரி தெரிவித்தார்.
இதையடுத்து, உடனடியாக கின்னஸ் சாதனை குழு பாபி மற்றும் ஜூலி கிரிகோரியை தொடர்புகொண்டு, அவர்கள் வளர்க்கும் நாய் குறித்து தகவல் திரட்டியுள்ளனர். திரட்டிய தகவலின் அடிப்படையில் பெப்பிள்ஸ் என பெயரிடப்பட்டுள்ள நாய்க்கு உண்மையாகவே 22 வயது என கண்டறியப்பட்டு உலகின் மிகவும் வயதான நாய் என்ற பட்டத்தையும் கின்னஸ் குழு வழங்கியுள்ளது.
கடந்த 2000 ம் ஆண்டு பாபி மற்றும் ஜூலி கிரிகோரி தம்பதியினர் நாய் வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இவர்கள் ஒரு பெரிய நாய் இனத்தை தேடி அழைந்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக டாய் ஃபாக்ஸ் டெரியர் இனத்தை சேர்ந்த நாய் குட்டியை எடுத்து வளர்த்துள்ளனர். சமீபத்தில்தான் அந்த நாய் தனது 22 வது பிறந்தநாளை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்