உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இன்றும் உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. சமீபத்தில், 'எவரெஸ்ட் மேன்' என்று அழைக்கப்படும் நேபாளத்தின் பிரபல மலையேறும் வழிகாட்டி கமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தில் 30வது முறையாக ஏறி உலக சாதனை படைத்துள்ளார். 






எவரெஸ்ட் சிகரத்தில் இன்று காலை 30 வது முறையாக ஏறிய கமி ரீட்டா ஷெர்பா, ஒன்பது நாட்களுக்கு முன்பு தான் படைத்திருந்த தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். 


ஒவ்வொரு ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே சிகரத்தை எட்டி சாதனை படைக்கிறார்கள். மேலும், ஒரு சிலர் எவரெஸ்ட்டை தொடும் ஆசையில் உயிரை விட்ட செய்திகளையும் அடிக்கடி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதிர்ச்சியான செய்தியும் உள்ளது. 


இதுவரை பதிவான வரலாற்றின் பதிவுகளின்படி, எவரெஸ்ட் ஏறும் ஒவ்வொரு 100 நபர்களில் 4 பேர் இறப்பதாக கூறப்படுகிறது. இப்படியான அதிர்ச்சி செய்திகள் வெளிவந்தபோதிலும், கமி ரீட்டா ஷெர்பா, 30 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.


கடந்த மே 12ம் தேதி கமி ரீட்டா ஷெர்பா இந்த சீசனில் முதல் முறையாக ஏறிய நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு கால் வைத்ததன்மூலம் இரண்டாவது முறையாக ஏறி, ஒட்டுமொத்தமாக 30வது முறையாக உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கால் வைத்துள்ளார். 


யார் இந்த கமி ரீட்டா ஷெர்பா..? 


நேபாளத்தின் சோலுகும்புவில் உள்ள தேம் கிராமத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா ஷெர்பா. இவருக்கு தற்போது 54 வயதாகிற்து. எவரெஸ்ட் மலையேற்றங்களில் ஏறுபவர்களுக்கு அனுபவம் வாய்ந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மலையேற்றும் நபர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவதே இவரது தனிப்பட்ட சிறப்பு. கமி ரீட்டா ஷெர்பா, மலையேறும் பயணம் கடந்த 1992ம் ஆண்டு எவரெஸ்ட் பயணத்தில் துணை ஊழியராக சேர்ந்தபோது தொடங்கியது. 


அன்று முதல் இன்று வரை, கமி ரீட்டா பலமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, அச்சமின்றி பல பயணங்களை செய்துள்ளார். மேலும், கே 2, சோ ஓயு, லோஸ்ட்சி மற்றும் மனஸுலு உள்ளிட்ட பல சிகரங்களிலும் ஏறி சாதனையை படைத்துள்ளார். 


71 ஆண்டுகால சாகர்மாதா மலையேற்ற வரலாற்றில் உலகின் மிக உயரமான சிகரத்தில் அதிகமுறை ஏறியவர் பட்டியலில் கமி ரீட்டா ஷெர்பா முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, சோலுகும்புவை சேர்ந்த பசாங் தாவா ஷெர்பா, 27 முறை சாகர்மாதாவில் ஏறியுள்ளார். இந்த சீசனில் பயணத்தில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 


எவரெஸ்ட் ஏறுவதற்கான அனுமதியின் விலை வெளிநாட்டவருக்கு 11 ஆயிரம் டாலர்கள் மற்றும் நேபாளிக்கு 75 ஆயிரம் ரூபாய் ஆகும். மலை ஏறும் நபர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நபர்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.