Nepal Flood: நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
170 பேர் உயிரிழப்பு:
நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 170 ஐ எட்டியுள்ளது என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 42 பேரை காணவில்லை என்பதால், அவர்களை தேடுவது மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. பல வாகனங்கள் புதையுண்டுள்ள நிலச்சரிவினால், திரிபுவன் நெடுஞ்சாலையில் 6.8 கிலோமீட்டர் சாலைப் பகுதி தடைப்பட்டுள்ளது. மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். நான்கு பேருந்துகள் இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அதில் ஒன்று முற்றிலும் மண்ணில் புதைந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி தீவிரம்:
காத்மாண்டு மற்றும் தாடிங் போலீசரின் கூட்டுக் குழு இடிபாடுகளில் இருந்து சடலங்களைத் தேடுவது மற்றும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேபாள ராணுவம் மற்றும் ஆயுதப்படை போலீசாரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் பிரேத பரிசோதனைக்காக காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சேற்றில் மேலும் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சேத விவரங்கள்:
வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 55 பேர் காணாமல் போயுள்ளனர், 101 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் தேசிய நெடுஞ்சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. குறைந்தது 322 வீடுகள் மற்றும் 16 பாலங்கள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நெடுஞ்சாலைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று ஆயுதப்படை போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மக்களை மீட்க 20,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 3,626 பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் இடைவிடாத மழை பெய்ததை அடுத்து, காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதி அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொத்து கொத்தாக பிணங்கள்:
சனிக்கிழமையன்று தலைநகர் காத்மாண்டுவின் எல்லையான தாடிங் மாவட்டத்தில், ஒரு பேருந்து நிலச்சரிவில் புதைந்ததில் 19 பேர் கொல்லப்பட்டனர். பக்தபூர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மற்றொரு நிலச்சரிவு சம்பவத்தில், மக்வான்பூரில் அனைத்து நேபாள கால்பந்து சங்கத்தால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் 6 கால்பந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். இப்படி கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.