Hassan Nasrallah Profile: இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மரணம்:
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64), பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தார். இதனை அந்த போராளி குழுவே உறுதிப்படுத்தியுள்ளது. நஸ்ரல்லா, ஹிஸ்புல்லா அமைப்பை கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வழிநடத்தி, மத்திய கிழக்கில் மிகவும் வலிமையான துணை ராணுவப் படைகளில் ஒன்றாக கட்டமைத்துள்ளார். அவரது தலைமையின் கீழ், ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் பல மோதல்களில் ஈடுபட்டுள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
யார் இந்த ஹசன் நஸ்ரல்லா?
அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் பலரால் மதிக்கப்படும் நபராகவும், மேற்கத்திய நாடுகளில் தீவிரவாதியாகவும் நஸ்ரல்லா கருதப்படுகிறார். அவர் ஹிஸ்புல்லாவை மறுவடிவமைத்தார். ஈரானிய ஷியைட் தலைவர்கள் மற்றும் ஹமாஸ் போன்ற பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுடன் நெருங்கிய கூட்டணிகளை உருவாக்கி, இஸ்ரேலின் முக்கிய எதிரியாக உருவெடுத்தார். சக்திவாய்ந்த நபராக இருந்தபோதிலும், இஸ்ரேலிய படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காக பெரும்பாலும் தலைமறைவாகவே வாழ்ந்தார்.
பெய்ரூட்டின் புறநகர் பகுதியான ஷர்ஷபூக்கில் 1960 ஆம் ஆண்டில் ஒரு ஏழை ஷியா குடும்பத்தில் பிறந்த நஸ்ரல்லா. ஈரானிய புரட்சிகர காவலரால் உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பில் கடந்த 1982ம் ஆண்டு சேர்ந்தார். 1992 இல் சையத் அப்பாஸ் முசாவி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் குழுவின் தலைவரானதாக கூறப்படுகிறது. 18 ஆண்டு கால ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு ஹிஸ்புல்லாவின் கொரில்லா தந்திரங்கள் வழிவகுத்தபோது நஸ்ரல்லா மேலும் முக்கியத்துவம் பெற்றார்.
ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் நஸ்ரல்லாவின் பங்கு முக்கியமானது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா எல்லையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் தான் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளார்.
நஸ்ரல்லாவின் வாரிசு யார்?
நஸ்ரல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து, காலியான ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் பதவியை நிரப்பப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடும் மற்றும் குழுவின் ஜிஹாத் கவுன்சிலில் பணியாற்றும் ஹாஷிம் சஃபிதீன், என்பவர் புதிய தலைவராவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நஸ்ரல்லாவின் உறவினரான சஃபிதீன், ஹிஸ்புல்லாவிற்குள் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளார். சஃபிதீனின் குடும்ப உறவுகள், நஸ்ரல்லாவை ஒத்திருப்பது மற்றும் மத அந்தஸ்து ஆகியவை அவரை புதிய தலைவராக பொறுப்பேற்க வழிவகுக்கின்றன.
எதிர்தாக்குதலை தொடங்கிய லெபனான்:
லெபனான் பகுதியில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், கடந்த 5 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய பகுதி மீது லெபனான் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. அதேநேரம், நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்ததற்கு அமெரிக்கத் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.