14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிரபஞ்சத்தின் பெருவெடுப்பு தொடர்புடைய ஆராய்ச்சிக்காக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இன்று ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது. அபிள்-ஐ விட பல மடங்கு ஆற்றல் மிக்க இந்த தொலைநோக்கியால், விண்வெளியில் இருக்கும் பல புதிர்களுக்கு விடைகிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
முன்னதாக, இதன் சிறப்பம்சங்கள் குறித்து நாசா வெளிட்ட்ட செய்திக் குறிப்பில்,
- உலகெங்கும் வானியல் ஆர்வலர்களுக்கு, அபிள் விண்வெளித் தொலைநோக்கியின் சீரிய கண்டறிதல்களை மேலும் விளக்கவல்ல, சிறப்பான ஆய்வுக்கூடமாக இது விளங்கும்.
- இஃதொரு பன்னாட்டுக் கூட்டுமுயற்சியாகும் - நாசா (அமெரிக்கா), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் & கனேடிய விண்வெளி நிறுவனம் ஆகிய இவற்றின் கூட்டுமுயற்சி.
- விண்வெளியில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகளுள், இது ஆகப் பெரியது! அபிள் நோக்கியை விட 100 மடங்கு ஆற்றல் மிக்கது!
- இது எத்துணைப் பெரிதென்றால், ஆரகாமி முறையில் மடிக்கப்பட்டு, ஏவுகலனில் அடக்கப்பட்டு, விண்வெளியில் விரிக்கப்படும் அளவுக்குப் பெரிதானது!
- அடுக்குக் கதிர்க்காப்பு கொண்ட இது, கதிரவனின் அகச்சிவப்புக் கதிர்வீச்சிலிருந்தும், நிலவு மற்றும் பூமியின் கதிர்வீச்சிலிருந்தும் காக்க வல்லது. 1 மில்லியன் SPF (கதிர் பாதுகாப்புக் காரணி) உடையது.
- அண்டகோளப் பெருவெடிப்புக்குப் பின்பிறந்த மீன்மண்டலங்களை, 13.5 பில்லியன் ஆண்டுகட்குப் பின்சென்று காணவல்ல இது, முன்னெப்போதுமில்லா அகச்சிவப்பு உணர்மிகை உடையது.
- இத் தொலைநோக்கி, பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் (L2 Lagrange Points), கதிரவனைச் சுற்றி இயங்கும். (அபிள் தொலைநோக்கி, 560 கி.மீ. சுற்றுப்பாதையில் இயங்குகிறது)