ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் நீதிமன்றம் ஒன்று கூகுள் நிறுவனத்தின் மீது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பேஸ்புக் நிறுவனத்தின் தற்போதைய வடிவமான மெடா நிறுவனத்தின் மீது சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அபராதமாக விதித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்யாவின் தரப்பில் இருந்து மேற்குலக நாடுகளைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது கடுமையான நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கனவே ஒருமுறை இந்தச் சமூக வலைத்தள நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுகளைப் போல நடந்துகொள்வதாக விமர்சித்திருந்தார்.
வெளியிடப்படும் பதிவுகளை சரிவரத் தணிக்கை செய்யாமல் இருப்பது, நாட்டின் விவகாரங்களில் தலையிடுவது ஆகியவற்றைக் காரணமாகக் கூறி, மாஸ்கோ நீதிமன்றம் சட்ட நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் மீது எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 24 அன்று, மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று கூகுள் நிறுவனத்தின் மீது சுமார் 97 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பேஸ்புக் நிறுவனத்தின் தற்போதைய வடிவமான மெடா நிறுவனத்தின் மீது சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அபராதமாக விதித்துள்ளது. ஏற்கனவே பல முறை முறையிட்டு சட்டவிரோத பதிவுகளை நீக்கத் தவறியதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில், கூகுள் நிறுவனத்தின் மீது 73.6 கோடி ரூபாய் மதிப்பிலான அபராதமும், மெட்டா நிறுவனத்தின் மீது 19.4 கோடி ரூபாய் மதிப்பிலான அபராதமும் விதிக்கப்படுகின்றன.
ரஷ்யாவின் அரசு தொலைதொடர்பு கட்டுப்பாட்டாளர் ராஸ்கோம்நாட்சார் தன்னுடைய செய்திக் குறிப்பில், `முதல்முறையாக ரஷ்ய நீதிமன்றம் ஒன்று இந்த நிறுவனங்கள், ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஈட்டும் வருவாயின் ஒரு பகுதியை அபராதமாக விதித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூகுள் நிறுவனமும், மெட்டா நிறுவனமும் ஏற்கனவே பல முறை முறையிட்டும் தங்கள் தளங்களில் இருந்து மத மோதலைத் தூண்டும் பதிவுகளையும், தீவிரவாதக் கருத்துகளைத் தூண்டும் பதிவுகளையும் நீக்காமல் தவிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, ரஷ்ய அரசு சிறார்களைப் பாதுகாப்பதாகவும், தீவிரவாதத்தை ஒழிப்பதாகவும் கூறி, விமர்சனங்களை ஒடுக்குவதற்காகவும், ரஷ்யாவின் இணையத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் பிற நாடுகளுடன் இணையாமல் தானாக உள்நாட்டிற்குள் மட்டுமே செயல்படும் இணைய வசதி ஒன்றையும் ரஷ்ய அரசு உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளன. `நீதிமன்ற ஆவணங்களைக் கவனமாக வாசித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்’ என கூகுள் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.