நாளை (ஏப்ரல் 6ஆம் தேதி) பூமியை நோக்கி வரும் 150 அடி கொண்ட விண்கல் பற்றி நாசா விளக்கம் அளித்துள்ளது.


விண்வெளியில் நமது பால்வழி விண்மீன் மண்டலத்தை போல் ஏராளமான விண்மீன் மண்டலங்கள் உள்ளது. விண்வெளியிலிருந்து அவ்வப்போது சிறுகோள் எனக்கூடிய asteroids பூமியை நோக்கி வரும். ஆனால் பெரும்பாலான சிறுக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பலாகும். ஆனால்  அரிதாக ஒரு சில சிறுகோள்கள் பூமிக்குள் நுழையும். அப்படி நுழையும் இந்த கற்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நாசா சிறுகோள்கள் பூமியை தாக்குமா என எப்போதுமே கண்காணித்து வரும்.


ஐந்து விண்கற்கள் பூமியை நெருங்கும் என்றும் அதில் இரண்டு விண் கற்கள் பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் நாசா தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. நாசாவின் ஆஸ்டெராய்டு வாட்ச் டாஷ்போர்டு விண்கற்கள் மற்றும் வால்மீன்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு விண்கல்லும் பூமியை நெருங்கும் தேதி, விண்கல்லின் தோராயமான விட்டம், பூமியிலிருந்து அதன் தூரம் ஆகிய விவரங்களை வெளியிடுகிறது.


பூமிக்கு வரும் சிறுகோள்கள்கள்:


சிறுகோள் 2023 FU6: ஒரு சிறிய 45 அடி சிறுகோள் நேற்றைய தினம் 1,870,000 கிமீ தொலைவில் பூமிக்கு மிக அருகில் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுகோள் 2023 FS11: 82-அடி அளவிலான சிறுகோள் நேற்று பூமியிலிருந்து 6,610,000 கிமீ தொலைவில் தென்பட்டதாக கூறப்படுகிறது.


சிறுகோள் 2023 FA7: 92 அடி சிறுகோள் ஏப்ரல் 4 அன்று 2,250,000 கிமீ தொலைவில் பூமிக்கு மிக அருகில் தென்பட்டது.


சிறுகோள் 2023 FQ7: இன்று (ஏப்ரல் 5), 65 அடி சிறுகோள் 5,750,000 கிமீ தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுகோள் 2023 FZ3: பூமியை நெருங்கும் சிறுகோள்களில் மிகப்பெரிய சிறுகோள் இது. ஏப்ரல் 6 அன்று பூமியைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 150 அடி அகலமுள்ள இந்த சிறுக்கோள் பூமியை நோக்கி 67,656 கிமீ வேகத்தில் கடக்கும். 4,190,000 கிமீ தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும் என நாசா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என கணித்துள்ளது நாசா.


வெவ்வேறு அளவுகளில் சுமார் 30,000 விண்கற்கள் பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எதுவும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது என்று கூறப்படுகிறது.


நமது சூரிய குடும்பம் பல மில்லியன் நூற்றாண்டுக்கு முன் உருவானது என்றும், அப்போதிலிருந்தே விண்கற்கள் விண்வெளியில் எஞ்சியிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஒரு பெரிய விண்கல்லை நாசா கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்த விண்கல் 23 ஆண்டுகளுக்கு பின் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பூமியை நெருங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் பூமியும் இந்த விண்கல்லும் மோதும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.