விண்வெளி துறையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை அவ்வப்போது செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை விண்வெளியில் நடத்தி சாதனை புரிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக ஒரு ஹெலிகாப்டரை பறக்க விட்டு ஒரு புதிய மைல்கல்லை படைத்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை அமெரிக்க நேரப்படி 3.30 மணியளவில் நான்கு பவுண்ட் எடை கொண்ட ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் பறக்க வைத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் கிட்டதட்ட 10 அடி உயரம் வரை பறந்தது. இந்த நிகழ்வு 30 வினாடிகள் வரை நீடித்தது.
இந்த நிகழ்வு முடிந்து 3 மணிநேரத்திற்கு பிறகு கலிஃபோர்னியாவில் உள்ள விண்வெளி மையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் கிட்டதட்ட 178 மில்லியன் மைல் தொலைவு கடந்து பூமிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை நாசாவின் மார்ஸ் ரோவர் செய்றகைக்கோள் நிழற்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பாக நாசாவின் விண்வெளி வீரர்கள், “நாங்கள் வேற்று கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டரை பறக்க வைத்துவிட்டோம். எங்களை பொறுத்தவரை இது ஒரு ‘ரைட் பிரதர்ஸ் தருணம்’. இந்த வெற்றிகரமான நிகழ்வு செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்விற்கு முக்கிய பங்காற்றும்” எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் பறக்க வைக்க நாசா விஞ்ஞானிகள் மிகுந்த சவாலை சந்தித்தனர். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மிகவும் மெல்லியது. இதில் ஒரு ஹெலிகாப்டரின் பிளேட் சுற்று பறக்க தேவையான லிப்ட் கிடைக்க மிகவும் போராடவேண்டும். இதை நாசா விஞ்ஞானிகள் கச்சிதமாக செய்து அசத்தியுள்ளனர்.
அதேபோல் இனி வரும் வாரங்களிலும் ஏதுவாக சூழல் அமைந்தால் 5 முறை ஹெலிகாப்டரை பறக்கவிட நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி இரண்டாவது முறை பறக்கும் போது உயரத்தை 10 அடியிலிருந்து 16 அடியாக அதிகரிக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை கடந்த வாரம் நடத்த நாசா திட்டமிட்டிருந்தது. எனினும் கடைசி நேரத்தில் ஹெலிகாப்டரின் ரோடாரில் ஏற்பட்ட பழுது காரணம் அப்போது அது நடக்கவில்லை. இந்த பழுது சரி செய்யப்பட்ட பிறகு இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு வெளியே உள்ள கிரகத்தில் ஹெலிகாப்டர் ஒன்று பறப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வை செய்து முடித்த நாசாவிற்கு பல நாடுகளும் தங்களின் பாராட்டை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.