கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக அளவில் விமான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கான விமான சேவையும் ஏப்ரல் 30-ந்தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில நாடுகளுடன் இந்திய அரசு 'ஏர் பபுள்' என்ற பெயரில் சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. 




அந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 27-ந்தேதி முதல் மதுரை- கொழும்பு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


கடந்த முறை கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய போதே புலம்பெயர்ந்த பல தொழிலாளர்கள், நாடு திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வந்தே பாரத் திட்டத்தில் பல நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு மத்திய அரசு சிறப்பு விமான சேவை இயக்கியது. அதன் மூலம் பலரும் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சிலர் நாடு திரும்பி, ஊரடங்கு வாபஸ் பெற்ற பிறகும் தாங்கள் பணியாற்றும் நாட்டுக்கு திரும்ப மனமின்றி இங்கேயே பணியை தொடர்கின்றனர். இன்னும் சிலர் பணியை விடுத்து மாற்றுத் தொழிலில் இறங்கியுள்ளனர். 


நிலைமை இப்படி இருக்கும் போது இலங்கையில் அதிக அளவில் புலம் பெயர்ந்தவர்கள் இருந்தும், இந்தியாவிற்கான பட்டியலில் அந்த நாடு சேர்க்கப்படாமல் இருந்தது. இப்போது அதற்கு தீர்வாக வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானம் இயக்கும் சேவையில் இலங்கையை இணைத்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களை சொந்த நாட்டில் கொண்டு சேர்க்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 


இலங்கை விமான சேவைக்கு மதுரை பொருத்தமாக இருக்கும் என்பதாலும், குறுகிய கால பயணம் என்பதாலும் மதுரை-கொழும்பு விமான சேவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மே மாதத்தில் துவங்கும் அந்த சேவையால் ஆண்டு கணக்கில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்புள்ளது. 


மே 27 ல் துவங்கும் இந்த விமான சேவையால் இரு நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மே 27 துவங்குவதாக கூறியுள்ள சேவையை முன்கூட்டியே துவங்கினால் தங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது ஒருபுறமிருக்க டிக்கெட் பதிவிற்கான அப்டேட் எதிர்பார்ப்பில் தொழிலாளர்கள் சிலர் இப்போதே ஆர்வம்காட்டி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.