அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணம், அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. இச்சூழலில், தாய்வானிய விவசாய பொருள்கள் மீது சீனா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ பயிற்சிகளையும், ஏவுகணை தாக்குதல்களையும் சீனா அறிவித்துள்ளது.


இப்படி இரு நாடுகளுக்கும் பிரச்னையாக மாறியுள்ள இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள நான்சி பெலோசி பற்றி கீழே காண்போம்.



  • 82 வயதான நான்சி பெலோசி, அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் 2021இல் நான்காவது முறையாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் பிரதிநிதிகள் சபையை வழிநடத்தும் முதல் பெண்மணி பெலோசி ஆவார். 2021 இல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அவர் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.

  • ஏழு குழந்தைகளில் இளையவரான பெலோசி பால்டிமோர், மேரிலாந்தில் வளர்ந்தவர். அங்கு அவரது தந்தை மேயராக பொறுப்பு வகித்தார். அவர் வாஷிங்டனில் உள்ள கல்லூரியில் படிப்பை மேற்கொண்டார். அங்கு பைனான்சியர் பால் பெலோசியைச் சந்தித்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் சான் பிரான்சிசோவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு, பெலோசி இல்லத்தரசியாக இருந்தார். இந்த தம்பதியருக்கு நான்கு மகள்கள் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

  • நான்சி பெலோசி 1976 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கலிபோர்னியாவில் ஜனநாயகக் கட்சியின் அதிகார மட்டத்தில் உயர்ந்து 1988 இல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 35 ஆண்டுகளாக, சபாநாயகர் பெலோசி, கலிபோர்னியாவின் 12வது மாவட்டமான சான் பிரான்சிஸ்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

  • 2003 இல் ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பின் மிகப்பெரிய எதிர்ப்பாளராக இருந்தவர். அது தவறான முடிவு என வெளிப்படையாகவே கூறி இருந்தார். 2018ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஸ்டேட் ஆஃப் தி யூனியன் உரைக்குப் பிறகு, அதை கிண்டலுடிக்கும் விதமாக அவர் கைதட்டினார். ​​இந்த புகைப்படம், இணையத்தில் இன்னும் பிரபலமான GIF ஆக உள்ளது. ஓராண்டுக்கு பிறகு, அவர் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்பு, டிரம்பின் பேச்சை கடுமையாக விமர்சித்தி பேசியிருந்தது மிக பிரபலமாக மாறியது.

  • சீனாவின் கோபத்தை மீறி தைவான் பயணத்திற்கு ஆதரவாக பெலோசி பேசியிருந்தார். தைவானிலும், உலகெங்கிலும் உள்ள ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்கர்கள் தங்கள் உறுதிப்பாட்டை நினைவில் கொள்ள வேண்டும் என தி வாஷிங்டன் போஸ்ட்டில் அவர் கட்டுரை எழுதினார்.
    ஆனால், அவர் சீன அரசுக்கு எதிராக நடந்து கொண்டது இது முதல் முறை அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தியனன்மென் சதுக்கத்திற்கு சென்று, 1989 போராட்டத்தில் கொல்லப்பட்ட அதிருப்தியாளர்களை கௌரவிக்கும் விதமான கொடியை ஏற்றி வைத்தார்.