மியான்மரில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பயணி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த இரண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல கிளர்ச்சி படைகள் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இப்படி ஒரு புறம் இருக்க மியான்மர் நேஷனல் ஏர் லைன்ஸுக்கு சொந்தமான ஒரு விமானம் மியான்மர் வான்வழியில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. பறந்து கொண்டிருந்த நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் கிழக்கு கயா மாநிலத்தில் தலைநகரான லோய்கா விமான நிலையத்தில் தரையிறங்க மெல்ல மெல்ல தரையை நோக்கி இறங்கியது.
அப்போது, விமான நிலையத்திற்கு வடக்கே நான்கு மைல் தொலைவில் இருந்தபோது, திடீரென பயணி ஒருவரது காதின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. குண்டு பாய்ந்த வேகத்தில் அதிவேகமாக ரத்தம் கொட்ட தொடங்கியது. இதனால் படுகாயமடைந்த அந்த நபருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
பறந்து கொண்டிருந்த விமானத்தில் எப்படி துப்பாக்கி குண்டு பாய்ந்தது என அனைவரும் குழப்பத்தில் இருக்க, பணிப்பெண்கள் விமானத்தில் இருந்த பயணிகளிடம் துப்பாக்கி இருக்கிறதா என்ற அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் யாரிடமும் துப்பாக்கி அகப்படவில்லை.
விமானத்தை சோதித்தபோது தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி குண்டு விமானத்தை தாக்கி, பயணியில் காதை கிழித்தது தெரியவந்தது. மேலும், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் விமான நிலையம் அருகில் இருந்ததால், சில நிமிடங்களிலேயே விமானம் தலையிறக்கப்பட்டு அந்த பயணிக்கு உடனடியாக அருகிலிருந்த உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக ராணுவ அரசின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் தெரிவிக்கையில், ”அரசுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சி படைகள்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர். பயணிகள் விமானத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சட்டவிரோதம். அதை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.
ராணுவ செய்தி தொடர்பாளரின் இந்த கருத்திற்கு மியான்மர் கிளர்ச்சி படை முற்றிலும் மறுப்பு தெரிவித்து வருகிறது. தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தும் உள்ளது.