அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டு வார காலம் பிணை வழங்கியுள்ளது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்.


ஊழல் வழக்கில் சிக்கிய இம்ரான் கான்:


பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்தநாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.


அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை “தோஷகானா” செய்து வருகிறது. ஆனால், இம்ரான்கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.


உச்ச நீதிமன்றம் காட்டிய அதிரடி:


இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் பாகிஸ்தானையே புரட்டி போட்டது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதோடு அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 


போராட்டம் கலவரமாக வெடிக்க, ராணுவம் குவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் நேற்று கூறியது. இச்சூழலில், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பாதுகாப்பு காரணங்களால் இரண்டு மணி நேர தாமதித்ததற்கு பிறகே, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வாகனத்தில் வந்திறங்கினார் இம்ரான் கான். 


ராணுவம், காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்தான் இம்ரான் கான், நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டார். 


இம்ரான் கான் கைதுக்கு பின்னணியில் ராணுவமா?


பாகிஸ்தானை பொறுத்தவரையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை காட்டிலும் ராணுவமே அதிகாரம் மிக்க அமைப்பாக திகழ்கிறது. ராணுவத்தின் உதவியோடு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், பின்னர், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, இம்ரான் கான் கைதுக்கு பின்னணியிலும் ராணுவம் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.