எரிமலையில் இருந்து வெளிவரும் நெருப்புக்குழம்பு தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறாக ஓடுவதால் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பிவருகின்றது அந்நாட்டு அரசு. சுமார் 19 ஆண்டுகள் கழித்து இந்த எரிமலை இப்போது மீண்டும் சீற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 


கடந்த 2002-ஆம் ஆண்டு இந்த எரிமலை சீற்றமடைந்துள்ளது, அப்போது அதன் தாக்கத்தால், சுமார் 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கோ விமான நிலையத்தை நோக்கி எரிமலை குழம்பு நகர்ந்து வரும் நிலையில் மக்களை அரசு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வருகின்றது காங்கோ அரசு. இரவு பகல் பாராமல் மக்கள் கொத்து கொத்தாக தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். 




காமா நகரில் இருந்து மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நகரில் உள்ள மவுண்ட் நிரயகாங்கோ உலக அளவில் மிகவும் அதிக உயிரோட்டத்துடன் உள்ள ஒரு எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சம் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் இயற்கை இன்னொரு உக்கிர முகத்தை எரிமலை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது. காமாவில் இருந்து மக்கள் எல்லையை கடந்த தற்போது ருவாண்டா நாட்டிற்கு சென்று வருகின்றனர் என்றும் தற்போதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு பகுதியாக உள்ள இந்திய ராணுவமும் இந்த பேரிடரில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்ல உதவி வருவதாக கூறப்படுகிறது. 




ஒரு எரிமலை உயிருடன் உள்ளதா என்பதை அறிய ஆய்வாளர்கள் பல தரநிலைகளை பின்பற்றுகின்றனர். ஒரு எரிமலையின் மேற்பரப்பின் கீழே உள்ள அதிசூடான நெருப்புக்குழம்பு ஒரு நிலையான சூழலில் இருக்கும்பட்சத்தில் அதை உயிருள்ள எரிமலை என்று கூறலாம். அதேசமயம் ஒரு எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நீராவி வெளியேறும் பட்சத்தில் அதையும் உயிருள்ள எரிமலை என்று கூறலாம். அந்த வகையில் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தற்போது உயிருடன் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை மௌனாலோவாதான். ஹவாய் தீவில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 13 ஆயிரத்து 680 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை இறுதியாக கடந்த 1984-ஆம் ஆண்டு சீற்றம் கொண்டது குறிப்பிடத்தக்கது.