காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற சொலவடை உண்டு. அதற்கேற்ப தான் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக் கூடத்தில் பேரன்டல் அசஸ்மென்ட் எனப்படும் அவரவர் குழந்தைகள் பற்றி எழுதிக் கொடுக்குமாறு சில கேள்விகள் கொடுத்துள்ளனர். அந்தக் கேள்விக்கு ஒரு தாய் எழுதிய பதில்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதை எழுதியவர் நியூயார்க் பத்திரிகையில் இணைப்பிதழ் ஆசிரியராகவும், புதின ஆசிரியராகவும் இருக்கும் எமிலி கவுட். தனது பதில்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். தனது 4 வயது மகன் பற்றி எமிலி எழுதிய கருத்துகளைப் படித்துப் பாருங்கள்.
அதற்கு தலைப்பாக நேர்மையாக எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதோ அந்த சுவாரஸ்ய கேள்வி பதில்கள்:
1. இந்தப் பருவத்தில் சமூக ரீதியாக உங்கள் குழந்தைக்காக நீங்கள் செய்ய விரும்புவது?
நான் என் மகனின் பார்வையில் ஒரு சீன் போடும் பெண்ணாக இருக்க விரும்பவில்லை.
2. கல்வி ரீதியாக இந்த ஆண்டு நீங்கள் என்ன மாற்றம் கொண்டு வர விரும்புகிறீர்கள்?
அவன் 4வது ரேங் வாங்கினால் தான் என்ன? எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை,
3. உங்கள் குழந்தையைப் பற்றி விவரிக்க 3 வார்த்தைகள் சொல்லுங்கள்..
தன் நிறைவான குழந்தை, எப்பவும் கூலான பையன், உற்சாகமானவன்.
4. இதைத் தவிர உங்கள் குழந்தை பற்றி ஏதாவது நான் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா?
இலியாவை உங்களுக்குப் பிடிக்கும். அவர் மிகவும் இனிமையானவர். சில நேரங்களில் அவரை யாரேனும் மாற்றிவிட்டார்களோ என்று யோசிப்பேன். ஆனால் எனக்கு வீட்டிலேயே பிரசவமானது. அதனால் அதற்கு வாய்ப்பில்லை.
குழந்தை வளர்ப்பு என்பது கலை:
இந்தத் தாயின் பதில்கள் அனைத்துமே அவர் குழந்தை வளர்ப்பை ஒரு கலை போல் நுணுக்கமாகக் கையாள்கிறார் என்பதற்கான சான்று. ஒரு தாய் இவ்வளவு யதார்த்தமாக கூலாக இருந்தால் அந்தக் குழந்தையும் நிச்சயமாக கூலாக இருக்கும்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள். கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு.
மிகவும் கண்டிப்பான பெற்றோர் அல்லது சர்வாதிகார பெற்றோர் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்பிக்க பொய்யர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு. குழந்தைகளுக்கு சுதந்திரத்தை அளிக்கும் பெற்றோர்கள் குழந்தையிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள். ஒரு நண்பனைப் போல பழகுவார்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
ஆகையால் நீங்கள் இரண்டாவது வகை பெற்றோராக இருக்கப் பாருங்கள்.