உலகின் வறட்சியான நாடாக பார்க்கப்படுவது ‘சோமாலியா’. இங்கு தலைவிரித்தாடும் பஞ்சத்தால் , பசியின் காரணமாக மக்கள் நாளுக்கு நாள் உயிரிழக்கும் சம்பவம்தான் அவலத்தின் உச்சம் . அதில் பெரும்பாலனவர்கள் குழந்தைகள்தான். இந்த நிலையில் சோமாலியா சத்துணவு மையங்களில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப்  தெரிவித்துள்ளது.




சோமாலியா முழுவதும் உள்ள ஊட்டச்சத்து மையங்களில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக , வரும் மாதங்களில் சோமாலியாவின் சில பகுதிகள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் என ஐ.நா அறிவித்திருந்தது. இந்த நிலையில்  ஐ.நா குழந்தைகள் நிறுவனம் (யுனிசெஃப்)  நேற்று  700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து யுனிசெஃப் சோமாலியா பிரதிநிதி வஃபா சயீத் ஜெனிவா செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பொழுது "இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை இடையே நாடு முழுவதும் உள்ள உணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் சுமார் 730 குழந்தைகள் இறந்துள்ளனர்.  அதே நேரம் பல இறப்புகள் முறையாக பதிவாகவில்லை. இதனால் இறப்புகள் அதிகரிக்ககூடும்” என தெரிவித்துள்ளது.




2011 இல் ஏற்பட்ட பஞ்சம் கால் மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.. சோமாலியா ஊட்டச்சத்து  மையங்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தட்டம்மை, காலரா அல்லது மலேரியா போன்ற பிற சிக்கல்களைக் கொண்ட குழந்தைகளுக்கானது. சமீப மாதங்களில் சுமார் 13,000 சந்தேகத்திற்கிடமான தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 78 சதவீதம் பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று யுனிசெஃப் கூறியது. இது ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களாக சோமாலியாவுக்கான நிதியுதவி அதிகரித்துள்ளது. மற்றும் ஐக்கிய நாடுகளின் $1.46 பில்லியன் முறையீடு இப்போது 67% நிதியளிக்கப்பட்டுள்ளது.ஆனால் தேவைப்பட்ட நிதி தாமதமாக வந்ததாகவும் , மேலும் உதவிகள் தேவைப்படுவதாகவும் அங்குள்ள தன்னார்வல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


"நாம் வேகமாக செயல்படவில்லை என்றால் கற்பனை செய்ய முடியாத அளவில் குழந்தைகள் இறப்பதை பார்க்கப் போகிறோம்" என்று டேனிஷ் அகதிகள் கவுன்சிலில் சோமாலியாவின் நாட்டு இயக்குனர் ஆட்ரி க்ராஃபோர்ட் கவலை தெரிவித்துள்ளார்.