போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அரசின் தலைவரான இரண்டாம் எலிசபெத் முன்னிலையில், செவ்வாயன்று பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்று கொண்டார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான லிஸ், புதிய அரசை அமைப்பதற்கு உரிமை கோரிய நிலையில், எலிசபெத் ராணி அவரின் கோரிக்கையை ஏற்று கொண்டார்.






பிரிட்டனின் 70 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் 15வது பிரதமராக பதவியேற்றுள்ளார் லிஸ். ராணியுடன் அவர் கைகுலுக்கிக்கொள்வது போன்ற புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது. 96 வயதான எலிசபெத் ராணி உடல்நலக்குறைவு காரணமாக லண்டனுக்குத் திரும்புவதற்கு சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள பால்மோரல் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.


இதுகுறித்து பக்கிங்காம் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "பார்வையாளர்கள் முன்னிலையில், எம்பி லிஸ்ஸை வரவேற்ற ராணி, ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று கொண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ராணியின் கையில் முத்தமிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசியாக, 1885 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி அரியணையில் இருந்தபோது, பால்மோரலில் அதிகாரம் மாற்றம் நடைபெற்றது. பொதுவாக, வெளியேறும் பிரதமரும் புதிய பிரதமரும் மத்திய லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் ராணியை சந்திப்பர். 1952 முதல் பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சி லண்டனுக்கு வெளியே ஒரு முறைதான் நடைபெற்றுள்ளது.


முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காலத்தில், மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறந்த பிறகு அவரது மகளான புதிய ராணியை ஹீத்ரோ விமான நிலையத்தில் அவர் சந்தித்து பதவி ஏற்று கொண்டார்.


இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் புதிய பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. பிரதமர் பதவிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகவும், மூன்றாவது பெண் பிரதமராகவும் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தேர்வாகியுள்ளார். புதிய பிரதமரான லிஸ் ட்ரசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த நாட்டு வழக்கப்படி, ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமர் பொறுப்பை ஏற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு அதாவது இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷிசுனக், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் இருவரும் போட்டியிட்டனர். புதிய கன்சர்வேட்டிவ் தலைவரைத் தேர்வு செய்வதற்காக 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் தபால் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் வாக்குகள் அளித்து வந்தனர்.