பிரபல கார் ரெய்டிங்  ஆப்பான ஊபர் மீது 500க்கும் மேற்பட்ட பெண்கள் வழக்குத் தொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஊபர் மீது புகார்:


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் வாடகை கார் ஆப் நிறுவனமான ஊபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தகுந்தது ஊபர் நிறுவனத்தில் பணியாற்றும் கார் டிரைவர்கள்  பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக எழும் புகார்களாகும். அமெரிக்காவில் இயங்கிவரும் ஸ்லேடெர் ஸ்லேடெர் ஸ்சுமன் எல்எல்பி என்ற அமைப்பு ஊபர் மீது சான்பிரான்ஸிஸ்கோவில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், ஊபரில் பயணம் செய்யும்போது பெண்கள் “கடத்தல், பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை, தொல்லை கொடுப்பது, தாக்குதல்” போன்றவற்றிற்கு உள்ளாகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது. ஊபர் நிறுவனத்தின் சில ஓட்டுநர்கள் பாலியல் குற்றங்களில் 2014-ஆம் ஆண்டு முதல் ஈடுபடுகிறார்கள் என்பது அந்நிறுவனத்திற்குத் தெரியும் என்று கூறியுள்ளது. ஊபருக்கு எதிராக சுமார் 550 பெண்கள் புகாரளித்துள்ளதாகவும், அதில் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நடைபெற்றுவருவதாகவும் அந்த சட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.




திணறும் ஊபர்:


ஊபர் நிறுவனம் நீண்ட காலமாக இந்த பாலியல் குற்றச்சாட்டு புகார்களை எதிர்கொள்ளத் திணறிவருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ஊபர் நிறுவனத்தின் இரண்டாவது பாதுகாப்பு அறிக்கை வெளியானது. அதில், காந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டில் மட்டும் பாலியல் தொடர்பான 3,824 புகார்களைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது. பாலியல் தொடர்பான பிரச்சனைகள் சமீப காலங்களாக அதிகரித்திருப்பதாக ஊபர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது என்றும் அதே நேரத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் மெதுவாகவும், போதுமான அளவில் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளதாக  சட்ட அமைப்பின் ஆடம் ஸ்லேடெர் கூறியுள்ளார்.


காரில் கேமராக்களைப் பொருத்துதல், ஓட்டுநர்களை பணிக்கு அமர்த்துவதற்கு முன் அவர்களது பின்னணியை கடுமையாக சரிபார்த்தல், ஓட்டுநர்கள் தவறான பாதையில் செல்லும்போது எச்சரிக்கை செய்யும் அமைப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலம் ஊபர் நிறுவனத்தால் பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு வழங்க முடியும் என்று ஆடம் கூறியுள்ளார்.




நீண்டகால பிரச்சனை:


ஊபர் ஓட்டுநர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக பெண்கள் தொடர்ந்துள்ள பல்வேறு வழக்குகளை ஊபர் நிறுவனம் சந்தித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் ஏறிய இரண்டு பெண்களிடம் ஊபர் ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதாக கடந்த 2018ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஊபர் அறிவித்தது. ஆனால், அமெரிக்காவுக்கு வெளியேயும் இது போன்ற புகார்களை சந்தித்து வருகிறது ஊபர் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஓட்டுநர்களின் பின்னணியை அடிக்கடி சரிபார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 3 ஆண்டுகளில் இரண்டு முறை ஊபரை தடை செய்தது லண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.


சமாளிக்கும் ஊபர்:


ஆனால், ஊபர் நிறுவனமோ “ஓட்டுநர்களின் செயல்பாடுகளுக்கு ஊபர் நிறுவனம் எப்படி பொறுப்பாக முடியும். அவர்கள் எங்கள் நிறுவனத்தின் வேலையாட்கள் அல்ல. காண்ட்ராக்ட் ஓட்டுநர்கள் மட்டுமே” என்று கூறிவருகிறது. எனினும், அதன் சமீபத்தைய பாதுகாப்பு அறிக்கையில், ஓட்டுநர்களை நியமிப்பதற்கு முன்பும் சரி, நியமித்த பின்பும் சரி பின்னணியை விரிவாக சரிபார்ப்பதாகக் கூறியுள்ளது. மேலும், பாலியல் தொல்லை கொடுப்பது கொடூரமான குற்றமாகும். ஒவ்வொரு புகாரையும் நாங்கள் தீவிரமாகவே எடுத்துக்கொள்கிறோம்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.