அடுத்த பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டியில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் தொலைக்காட்சி விவாதத்தில் இவர்கள் ஐவரும் கலந்து கொண்டு வரி மற்றும் அரசியலில் நேர்மை என்ற தலைப்பில் பேசியுள்ளனர். 


90 நிமிடங்களுக்கு நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் மூலம் ஏற்கனவே போட்டியில் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களுக்கும் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு பிரபலமடையாத வேட்பாளர்களுக்கும் தங்களின் யோசனைகளை மக்களிடம் எடுத்து செல்ல இது முதல் வாய்ப்பாக அமைந்தது. ஆனால், இதில், ஒருவருக்கொருவர் நேரடியான விமர்சனத்தை மேற்கொள்ளவில்லை. 


ஒரு கட்டத்தில், வரி குறித்த விவாதத்தில் அனல் பறக்க, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரி விகிதம் உயர்த்தப்பட்டதற்கு ஆதரவாக போட்டியில் முன்னிலையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் பேசினார்.


அடுத்த வாரத்தில் இறுதி இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பிக்களின் ஆதரவின் அடிப்படையில் முதல் இரண்டு சுற்றில் சுனக் முன்னிலை வகித்து வருகிறார். வரி உடனடியாக குறைக்கப்படும் என மற்ற வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.


கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பிரிட்டன் மோசமான பண வீக்கத்தை சந்தித்துள்ளது. இச்சூழலில், பணக்காரரான ரிஷி சுனக்கின் குடும்ப வரி விவகாரம் அவரின் பெயரை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. இதனிடையே, பொறுமையாகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் சுனக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த பிப்ரவரி மாதம், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பின்ச்சர் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அரசின் துணைக் கொறடாவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.


இதனிடையே கடந்த ஜூன் 29 ஆம் தேதி கிறிஸ் பின்ச் கிளப் ஒன்றில் அதிகளவு மது அருந்தி விட்டு இரண்டு ஆண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தகராறும் செய்துள்ளார். இது பூதாகரமாக வெடித்ததும் பின்ச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 


இதையடுத்து, கடந்த ஜூலை 5 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த போரிஸ், கிறிஸ் பின்ச் பற்றிய குற்றச்சாட்டு குறித்து தெரிந்திருந்த போதும், அவரைத் துணை கொறடாவாக நியமித்தது எனது தவறு தான் என கூறினார். இதற்காக  பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். 


இதனை காரணம் காட்டி அந்நாட்டின் நிதியமைச்சரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் க்வின்ஸும் ராஜினாமா செய்ய போரிஸூக்கு நெருக்கடி ஆரம்பித்தது. 


மேலும் கன்சர்வேட்டிவ் கட்சியின், துணைத் தலைவர் பிம் அஃபோலமி, வர்த்தக தூதர் ஆண்ட்ரூ ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய பரபரப்பான சூழல் நிலவத் தொடங்கியது. சொந்தக் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என இருவரும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமாவை அறிவித்தார்.


இதையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் கன்சர்வேட்டிவ் கட்சி இறங்கியுள்ளது.