வடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகளுடன் நடந்த தீவிர சண்டையில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாகவும், பலரும் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று யாதெங்கா மாகாணத்தில் உள்ள கொம்ப்ரி கம்யூனில் இராணுவத்திற்கு உதவிய பதினேழு வீரர்கள் மற்றும் 36 தன்னார்வப் போராளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பல இஸ்லாமிய ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதீத கோழைத்தனமான சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயம் அங்கு பயங்கரவாத இயகங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில், நேற்றைய தினம் பயங்கரவாத அமைப்புகள் வடக்கு புர்கினா பாசோவில் தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதல் சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளிய அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் ஜிஹாதி தாக்குதல்களால் மேற்கு ஆபிரிக்க நாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


ஒரு காலத்தில் அமைதியாக இருந்த தேசத்தை வன்முறை பிளவுபடுத்தியுள்ளது, இது கடந்த ஆண்டு இரண்டு ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு வழிவகுத்தது மேலும் தலைநகரான ஓவாகடூகோவை சுற்றி வளைக்கும் தாக்குதல்கள் அதிகரித்தன. ஏறக்குறைய நாட்டின் பாதி பகுதி அரசாங்க கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.


2022 ஜனவரியில் நடந்த முதல் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு ஜிஹாதிகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய 18 மாதங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆப்பிரிக்கா மூலோபாய ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.  மேலும், "இந்த வன்முறை, ஓவாகடூகோவைச் சுற்றியுள்ள தீவிரவாத நடவடிக்கைகளின் புவியியல் பரவலுடன் இணைந்து, புர்கினா பாசோவை முன்னெப்போதையும் விட சரிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.