சூடானின் தலைநகர் கார்த்தூமில் உள்ள மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளதால் அங்கிருந்து ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள நிருபர்களுடன் சூடானில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் பேசிய சூடானுக்கான உலக சுகாதார அமைப்பின் பணியாளார் நிமா சயீது அபீது கூறுகையில், தேசிய பொதுச் சுகாதார மருத்துவ ஆய்வுக் கூடத்தினை போராட்டக்காரர்கள் வசப்படுத்தியுள்ளனர். அதனால் அங்கு ஊழியர்களால் செல்ல முடியவில்லை. அங்குள்ள நுண்ணுயிரிகள் மாதிரிகளை பத்திரப்படுத்த வேண்டும் என்று கவலை தெரிவித்தார்.
உள்நாட்டு கலவரம்:
ஆப்ரிக்கா நாடான சூடானில் பல ஆண்டுகளாகவே உள்நாட்டுக் கலவரம் நடந்து வருகிறது. அங்கு நீண்ட காலமாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. ஆனால், அந்தப் புரட்சிக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயக முறையில் ஆட்சி அமையவில்லை. மாறாக அங்கு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சியிலும் மக்கள் நிம்மதியாக இல்லை.
அங்கு வறுமையும் தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் வளங்கள் மூலமாக வரும் வருமானமும் மக்களுக்கு முழுசாக நலத்திட்டங்களாக சென்று சேர்வதில்லை. இப்படி, ஜனநாயக ஆட்சி இல்லாத நிலையில் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.
400க்கும் மேற்பட்டோர் பலி:
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இதுவரை ஒரு இந்தியர் உட்பட 459 பேர் பலியாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மோதல் காரணமாக அங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. உணவு, தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அவதியுறுகின்றனர். இந்நிலையில் ஐநாவின் மனிதாபிமான உதவிகள் அலுவலகம் சில சேவைகளை நிறுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. சூடானில் மோதல் தொடங்கியதிலிருந்து ஐ.நா. மனித உரிமையாளர்கள் ஐந்து பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கூட்டமைப்பு தனது ஊழியர்களை திரும்பப் பெற்றுள்ளது.
அதேபோல் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆப்ரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் பேட்ரிக் யூசுப், சூடான் தனது மோதல் போக்கைக் கைவிட்டு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்துமாறு கோரியுள்ளார்.
இந்தியர்கள் மீட்பு:
இந்நிலையில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக 278 இந்தியர்கள் சூடான் துறைமுகத்திலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை நோக்கிப் புறப்பட்டனர். இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பலில் அவர்கள் புறப்பட்டுள்ளனர்.