அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையின் உயர்மட்ட கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட உலகின் வலுவான 20 நாடுகளின் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்கும் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் இந்தியப் குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருந்தது. இந்த ஒரு விஷயம் பெரும் பேசும் பொருளாக மாறியது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியக் கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டதிலிருந்து மத்திய அரசு இந்தியா என்ற பெயரை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக இந்தியா என இடம்பெறும் நிலையில் இந்த ஆண்டு பாரத் என இடம்பெற்றது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றப்படப் போவதாக தகவல்கள் கசிந்தது. ஜி20 மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பாரதம் என்ற பெயரே இருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் ஐ.நா பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வு நடைபெற்றது. நேற்றைய தினம் இந்த பொதுச்சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது உரையை தொடங்கும் போது இந்தியாவுக்கு பதிலாக பாரதத்தின் வணக்கம் என குறிப்பிட்டார்.
மேலும் இந்தியா மற்றும் கனடா இடையே இருக்கும் பிரச்சனை குறித்த கேள்விக்கு, “இது இந்திய அரசின் கொள்கையல்ல என்று கனடாவிடம் தெரிவித்துள்ளோம். உங்களிடம் ஏதேனும் குறிப்பிட்ட மற்றும் தொடர்புடைய தகவல் இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். கடந்த சில ஆண்டுகளில், பிரிவினைவாத சக்திகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கனடா சந்தித்து வருகிறது. எனவே உண்மையில், நாங்கள் குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் தகவல்களைப் பற்றி பேசி வருகிறோம். கனடாவில் இருந்து செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் தலைமைத்துவம் பற்றிய பல தகவல்களை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். கனடாவில் பயங்கரவாதத் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நமது இராஜாங்க ரீதியான அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள், நமது துணைத் தூதரகங்கள் தாக்கப்படும் சூழ்நிலை உள்ளது. யாரேனும் குறிப்பிடத்தக்க உறுதியான தகவல்களை கொடுத்தால் அதை நிச்சயமாக கருத்தில் கொள்ளப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜெயசங்கர் தனது தொடக்க உரையின் போது பாரதம் என குறிப்பிட்டது போலவே முடிவுரையிலும் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். ''நாங்கள் பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக பின்பற்றி வருகிறோம். இந்த கலவைதான் பாரத்தை வரையறுக்கிறது” என பேசி தனது உரையை முடித்துக்கொண்டார்.