ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களும் பயணம் செய்தனர்.


17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த யாருமே உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனவும், ரைசி உயிரிழந்துவிட்டதாகவும் உள்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


காசா போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்திருப்பது புவிசார் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே சமீபத்தில்தான் ஏவுகணை தாக்குதல் நடந்தது.


யார் இந்த முஹம்மது முக்பர்?


இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், ஈரான் நாட்டின் முதல் துணை அதிபர் முஹம்மது முக்பர், அந்நாட்டின் அரசியலமைப்பின்படி இடைக்கால அதிபராக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 


இடைக்கால அதிபராகும் முக்பர், மூன்று நபர் குழுவின் ஒரு பகுதியாக செயல்படுவார். நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் நீதித்துறையின் தலைவருடன் இணைந்து 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தலை நடத்துவார்.


கடந்த 1955ஆம் ஆண்டு, செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்த முக்பர், ரைசியைப் போலவே, ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அலி கமேனிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். நாட்டின் முக்கிய விஷயங்களில் இறுதி முடிவு எடுப்பவர் அலி கமேனியே ஆவார். கடந்த 2021ஆம் ஆண்டு, அதிபராக ரைசி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அந்நாட்டின் முதல் துணை அதிபராக பதவியேற்றவர் முக்பர்.


முக்பருக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்:


கடந்தாண்டு, அக்டோபர் மாதம் மாஸ்கோவிற்கு சென்ற ஈரான் தலைவர்கள் குழுவில் முக்பரும் இடம்பெற்றிருந்தார். அப்போது, ரஷியாவின் ராணுவத்திற்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வழங்கும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த குழுவில், ஈரானின் புரட்சிகர காவல் படையை (பாதுகாப்பு படை) சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகளும், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரியும் இடம்பெற்றிருந்தனர்.


இதற்கு முன்பு, செட்டாட் அமைப்பின் தலைவராக பதவி வகித்தார். அந்நாட்டின் அதிகாரமிக்க நிதி அமைப்பாக உள்ளது. இந்த நிதி அமைப்புதான், பல்வேறு தொண்டுகளை செய்து வருகிறது.


கடந்த 2010ஆம் ஆண்டு, அணு ஆயுதம் மற்றும் சட்டவிரோத ஏவுகணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது. இந்த பட்டியலில் முக்பரும் இடம்பெற்றிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை தடை பட்டியலில் இருந்து நீக்கியது.