அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக ட்ரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். அதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி நேற்று அவருடன் தொலைபேசியில் உரையாடினார். அதன்பின்னர், மோடி பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா வர உள்ளதாக, ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்புடன் உரையாடிய பிரதமர் மோடி
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின் முதன் முறையாக பிரதமர் மோடி நேற்று இரவு அவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அந்த உரையாடல் குறித்து தனத எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது அன்பு நண்பர் அதிபர் டிரம்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டாவது முறையாக அவர் அதிபரக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு வாழ்த்துகள் தெரிவித்தேன். இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இரு நாட்டு மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம்” என தனது பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் அமெரிக்க வருகை குறித்து ட்ரம்ப் தகவல்
இந்திய பிரதமர் மோடியுடனனான தொலைபேசி உரையாடல் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் உரையாடியதாவும், பிப்ரவரி மாதத்தில் இந்திய பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருவார் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை திரும்பப்பெற இந்தியா முறையான நடவடிக்கைகளை எடுக்கும் என மோடி தெரிவித்துள்ளதாக கூறினார். இந்தியாவுடன் நல்லுறவு இருப்பதாக தெரிவித்த ட்ரம்ப், உலக அமைதி, இந்தியா-பசிபிக், மத்திய கிழக்குப் பகுதி மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து பேசியதாகவும் கூறியுள்ளார்.
மோடி-ட்ரம்ப் உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை
பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையேயான உரையாடல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் தயாரிப்பு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை இந்தியா அதிகரித்து, நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்துவது, மூலோபாய உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வருடத்தின் பிற்பகுதியில் இந்தியா முதன் முறைக குவாட் மாநாட்டை நடத்த உள்ள நிலையில், அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மற்றும் இந்தோ-பசிபிக் குவட் கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.