Miss World 2024: உலக அழகி பட்டம் வெல்பவருக்கு அணிவிக்கப்படும், கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. 


உலக அழகிப் போட்டி:


மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உலக அழகிப் போட்டியானது, கடந்த 1951ம் ஆண்டு எரிக் மார்லி என்பவரால் தொடங்கப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர் பெரும் புகழ் மற்றும் மரியாதையை பெறுவதோடு, உடனடியாக பெரும் பணக்காரராகவும் ஏற்றம் காண்கிறார். காரணம் போட்டியில் வழங்கப்படும் பரிசுத் தொகை. அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த 2024ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டியில், செக் குடியரசைச் சேர்ந்த, கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை உள்ளிட்ட சலுகைகள் மற்றும் அணிவிக்கப்படும் கிரீடத்தின் மதிப்பு தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.






உலக அழகிக்கான பரிசுத் தொகை:


உலக அழகி பட்டத்தை வென்றவர், உலக அழகி கிரீடத்துடன் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுகிறார்.  மனிதாபிமான பிரச்சினைகளை முன்வைப்பதற்காக உலகம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். இதில் தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவையும் அடங்கும். ஒரு வருடத்திற்கு ஒப்பனை மற்றும் முடியை அழகுபடுத்துவதற்கான பொருட்கள், காலணிகள், உடைகள், நகைகள் மற்றும் பலவற்றை வழங்கப்படும். தொழில்முறை ஒப்பனையாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட வசதிகளை அணுகலாம். வெற்றியாளருக்கு சிறந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். அவர் உலக அழகி அமைப்பின் பிராண்ட் தூதராகவும் இருப்பார். அதோடு, பெரும் பரிசுத்தொகையும் வழங்கப்படும். அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் மனுஷி சில்லர், 10 கோடியை பரிசாக பெற்றதாக கூறப்படுகிறது.


இதையும் படிங்க: Miss World 2024: உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா - வழக்கறிஞர் To பேரழகி


உலக அழகிக்கான கிரீடத்தின் மதிப்பு எவ்வளவு?


உலக அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு கிரீடதை முடிசூட்டும் வழக்கம், கடந்த 1955 இல் தொடங்கியது. அதன் பின்னர் கிரீடத்தின் வடிவமைப்பு பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. தற்போதைய வடிவமைப்பு 1972 இல் பயன்பாட்டில் இருந்ததை சார்ந்து இருக்கிறது. கிரீடத்தின் வடிவமைப்பில் 1978 முதல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிரீடத்தின் மதிப்பு சுமார் 6 கோடியே 21 லட்சம் என கூறப்படுகிறது. இது 4.3 அங்குல உயரம் மற்றும் அட்ஜெஸ்டபள் பேண்டை கொண்டுள்ளது. இது நீலம் மற்றும் டர்க்கைஸ் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


உலக அழகி பட்டம் வென்ற இந்தியர்கள்:


ரீட்டா ஃபரியா பவல் 1966 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில், வெற்றி பெற்ற இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசிய பெண்மணியும் ஆவார். 1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு டயானா ஹைடன், 1999ம் ஆண்டு யுக்தா முகி, 2000ம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா, 2017ம் ஆண்டு மனுஷி சில்லர் என, மொத்தம் 6 இந்தியர்கள் உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளனர்.