பிரபஞ்ச அழகிப்போட்டி :
ஒவ்வொரு ஆண்டும் Miss Universe அழகிப்போட்டி உலகின் ஏதாவது ஒரு நாட்டில் நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் இளம்பெண்ணே பிரபஞ்ச அழகி என்ற மகுடத்தை சூடுவார். இதில் நிறைய வரைமுறைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கும் பெண்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும் , 18 முதல் 28 வயதுடையவராக இருக்க வேண்டும் , குழந்தை பெறாதவராக இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன . ஆனால் இனிமேல் திருமணமானவர்கள் மற்றும் குழந்தை பெற்றவர்களும் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என Miss Universe கமிட்டி அறிவித்துள்ளது.
திருமணம் தடையல்ல :
72 வது பிரபஞ்ச அழகிப்போட்டி அடுத்த ஆண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது. இதில் திருமணமான மற்றும் குழந்தை பெற்ற 18 வயது முதல் 28 வயது வரையில் உள்ள பெண்கள் பங்கேற்கலாம். இது குறித்து பிரபஞ்ச அழகிப்போட்டி நடத்தும் குழு கூறுகையில் “ ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு அவள் சாதனைகளுக்கு தடையாக இருக்க கூடாது.. பெண்கள் எப்போதுமே தங்களின் வாழ்க்கையை நிர்வகிக்கும் திறமை கொண்டவர்கள் என நாங்கள் நம்புகிறோம் “ என தெரிவித்துள்ளனர்.
பிரபஞ்ச அழகி வரவேற்பு :
போட்டிக்குழு எடுத்த இந்த முடிவிற்கு மிஸ் யுனிவர்ஸ் 2020 பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர் “ நான் உண்மையாகவே இந்த புதிய அறிவிப்பை விரும்புகிறேன். எல்லா துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்துகிறார்கள் . அதே போலவே குடும்ப பெண்களுக்கு வழியை திறந்துவிடும் நேரமிது “ என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “ ஒரு சிலர் இந்த மாற்றங்களை எதிர்க்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் எப்போதும் சிங்கிளாக இருக்கும் அழகான பெண்ணைப் பார்க்க விரும்புகிறார்கள். அவளை வெளியில் இருந்து பார்க்கிறார்கள். அவள் எளிதில் அனுக முடியாத அளவில் இருக்க நினைக்கிறார்கள். முன்பிருந்த பெண் பாலினத்தன்மை உடையவள், இப்போது இருப்பவள் எதார்த்தமற்றவள்." என்றார்.
திருமண சர்ச்சையில் ஆண்ட்ரியா :
பிரபஞ்ச அழகி ஆண்ட்ரியா மெசா மகுடம் சூட்டப்பட்ட சில மணி நேரத்தில் திருமணமானவர் என்ற சர்ச்சைக்கு உள்ளானார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவருடன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இது வைரலானதை தொடர்ந்து அந்த புகைப்படம் மெக்சிகோ சுற்றுலா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் என்றும் , அதில் நான் அம்பாசிட்டராக இருந்ததாகவும் ஆண்ட்ரியா விளக்கமளித்திருந்தார்.