2022 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்போனி கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகமெங்கும் உள்ள பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி 71வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் மோரியல் கன்வென்ஷன் சென்டரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் 84 நாடுகளைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்போனி கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை வெனிசுலாவின் அமண்டா டுடாமெல்லும், 3வது இடத்தை டொமினிகன் குடியரசின் ஆன்ட்ரீனா மார்டினெஸ் பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் திவிதா ராய் 16வது இடத்தைப் பெற்று ஏமாற்றமளித்தார். முதலிடம் பெற்ற ஆர்போனி கேப்ரியலுக்கு 5.58 மில்லியன் டாலர் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அவருக்கு முடிசூட்ட 2021 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து மேடைக்கு வரவழைக்கப்பட்டார். மிஸ் யுனிவர்ஸாக அவர் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி என்பதால் மேடைக்கு வரும் போது ஹர்னாஸ் சந்து உணர்ச்சி வசப்பட்டு அழுதார். இது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதன் வீடியோ மிஸ் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிரப்பட்டது.
ஆர்போனி கேப்ரியலிடம் நீங்கள் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றால், இது ஒரு அதிகாரம் மற்றும் முற்போக்கான அமைப்பு என்பதை நிரூபிக்க நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் மிகவும் ஆர்வமுள்ள ஃபேஷன் டிசைனராக 13 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். எனது ஃபேஷனை நன்மைக்கான சக்தியாகப் பயன்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், ஆடைகளை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் மூலம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை என்னால் குறைத்து வருகிறேன்.
அதேசமயம் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிய பெண்களுக்கு நான் தையல் வகுப்புகளை கற்பிக்கிறேன். நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு சிறப்பு உள்ளது. அந்த விதைகளை நம் மற்றவர்களின் வாழ்வில் விதைக்கும்போது அவர்களை மாற்றுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஹர்னாஸ் சந்து
கடந்தாண்டு இஸ்ரேலின் எய்லட் நகரில் நடந்த யுனிவர்ஸ் டோமில் 2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. 80 நாடுகளைச் சேர்ந்த இந்த போட்டியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டு சாதனைப் படைத்தார்.
கிட்டதட்ட 2 தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியாவை சேர்ந்தவர் மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டதை இந்திய மக்கள் கொண்டாடினர். இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு சுஷ்மிதா சென்னும், 2000 ஆம் ஆண்டு லாரா தத்தாவும் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தனர். அவரிடம் இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்றைய அழுத்தங்களுக்கு நீங்கள் அளிக்கும் ஆலோசனை என்ன? என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய அழுத்தம் தங்களை நம்ப வேண்டும் என்பது தான். பிறருடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்களுக்காக நீங்களே பேசுங்கள். நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையை வழிநடத்துபவர். நான் என்னை நம்பியதால் தான் இங்கே இருக்கிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.