கடந்த ஆறு மாத காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகப் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்  அடிப்படை வசதிகளுக்கு வழியில்லாமல், ஒருவேளை உணவுக்குக் கூட திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் இலங்கை மக்கள்.

 

 கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, இலங்கையில் இருந்து
  வெளிநாடுகளுக்கு  ‌ மக்கள்   புலம்பெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆறு மாத காலத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையை விட்டு வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்பவர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையில்  உணவுப் பொருட்கள் ,அத்தியாவசிய பொருட்கள் இல்லாததால் மக்கள் அந்நாட்டு அரசை நம்பாமல் ,ஒரு தரப்பினர் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேலும்  ஒரு பிரிவு மக்கள் தத்தமது குடும்பங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் , தமக்கு இருக்கும் பொருட்களை, நகைகளை விற்றுவிட்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களை உள்வாங்கும் நாடுகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இலங்கை அரசியலில் பதவிப் போட்டிகள் சூடு பிடித்திருந்த நிலையில் அவற்றை சரிசெய்யவே குறைந்தது மூன்று நான்கு மாதங்கள் தேவைப்பட்டது .

 

அரசியல் கட்சிகளின்  பதவிப்போட்டிகளுக்கு இடையே  அங்கு பொருளாதார பிரச்சினை என்பது கோரத் தாண்டவம் ஆடி இருந்தது .அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்நாட்டு அரசையும் நம்பாமல் தமக்கு இருப்பவற்றைக் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தனர். அந்த வகையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். ஜனவரி  முதல் ஜூலை மாதம்  வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 179 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் ஒரு லட்சத்து 767 பேர் தனிப்பட்ட முறையில் வேலை தேடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 55 ஆயிரத்து 411 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுமதிப் பத்திரங்களுடன்  தொழில் நிமித்தமாக சென்றுள்ளார்கள். இவ்வாறு வெளிநாடு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு  நாடுகளுக்கு சென்றுள்ளனர். மேலும் சில மக்கள் தொகுதியினர் தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

மத்திய கிழக்கு நாடுகளான, கத்தாருக்கு 36 ஆயிரத்து 229 பேரும்,     சவுதி அரேபியாவுக்கு 26 ஆயிரத்து 98 பேரும்,  குவைத்துக்கு 39 ஆயிரத்து 216 பேரும்,  சென்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்   ஜப்பானுக்கு 2 ஆயிரத்து 570 பேரும்,தென் கொரியாவுக்கு 3 ஆயிரத்து 219 பேரும்,  சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பல்வேறு கஷ்டங்களுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகிறார்கள் 

 

இதனால் அரசு தீர்வை வழங்குவார்கள் என எதிர்பார்த்து இருந்த மக்கள், நாட்கள் செல்லச் செல்ல பொருட்களுக்கான விலையேற்றமும்,  உணவு பற்றாக்குறையும் அதிகரிப்பதை  கண்டு, இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கினர்.