பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்புதான், பிரிட்டனில் படித்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயது பெண் கொலை செய்யப்பட்டார். 


இந்திய வம்சாவளியினர் மத்தியில் அச்சம்:


இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பே குறையாத நிலையில், தற்போது இரண்டாவது கொலை சம்பவம் நடந்துள்ளது. மூன்றே நாள்களில் நடந்த இரண்டாவது கொலை சம்பவம் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


38 வயது இந்திய வம்சாவளியான அரவிந்த் சசிகுமார், கேம்பர்வெல் சவுத்தாம்ப்டனில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு, அக்கம்பக்கத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள்,  அரவிந்த் சசிகுமாரின் உடலை கைப்பற்றியுள்ளனர்.


அவரின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கொலை தொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "வெள்ளிக்கிழமை அதிகாலை 1.31 மணியளவில் கொலை நடந்துள்ளது. மறுநாள் சனிக்கிழமை அன்று, சல்மான் சலீம் என்ற 25 வயது இளைஞருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


பிரிட்டனில் தொடரும் கொலை சம்பவங்கள்:


அவர் அதே நாளில் குரோய்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூன் 20ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு, பழைய பெய்லியில் மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் சசிகுமார் மார்பில் குண்டடிபட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


கொலை குறித்து கேம்பர்வெல் மற்றும் பெக்காம் எம்.பி. ஹாரியட் ஹர்மன் கூறுகையில், "இது ஒரு பயங்கரமான கொலை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றார்.


ஹைதராபாத்தை சேர்ந்த பெண், லண்டனில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வசித்து வந்துள்ளார். அதே, குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த பிரேசில் நாட்டை சேர்ந்தவர்தான் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார்.


சமீபத்தில், அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள ஏரியில் இரண்டு இந்திய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போன மாணவர்களின் உடல்கள் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது வம்சாவளி இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அமெரிக்க விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். பாஸ்டனில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பருக்காக காத்திருந்தபோது பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.