11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடைபெற்ற மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை இதுவே எனவும் கூறப்படுகிறது.
உலகளவில் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களாக ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் உள்ளன. இந்நிற்வனங்களின் தாய் நிறுவனமாக மெட்டா நிறுவனம் உள்ளது. மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமாக மார்க் ஜூக்கர்பெர்க் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, விளம்பர சந்தையில், வருவாய் குறைந்ததாகவும், மேலும் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாகவும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவானது, "மெட்டாவின் வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான மாற்றங்கள் என வாட்சப், ஃபேஸ்புக் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, பணி நீக்கம் செய்வது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் ட்விட்டர் பங்குகளை நிறுவனத்தின் பணியாளர்கள் வங்குவதை தவிர்க்கவே என கூறப்படுகிறது.
ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.