மெட்ட குழுமம் தங்களது நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்தியர்கள் உட்பட 6000 பேரை, பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
6000 பேர் பணிநீக்கம்:
மெட்ட குழுமத்தில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, கடந்த மார்ச் மாதம் அந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து 4 ஆயிரம் பேரின் வேலை பறிக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக தற்போது மேலும், 6000 பேர் மெட்டா நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியர்களும் அடங்கியுள்ளனர்.
முக்கிய பொறுப்புகளை இழந்த இந்தியர்கள்:
மெட்டா இந்தியாவின் சந்தைப்படுத்தல் இயக்குநர் அவினாஷ் பந்த் மற்றும் மீடியா பார்ட்னர்ஷிப்களின் இயக்குநர் மற்றும் தலைவரான சாகேத் ஜா சௌரப் ஆகியோரும் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிராண்ட் மேனேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், விளம்பர மேம்பாடு மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பந்த், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மெட்டா நிறுவனத்தில் சேர்ந்தார். அதேபோன்று இந்தியாவில் உள்ள ஸ்டுடியோக்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஏஜென்சிகளுடன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் உறவை நிர்வகித்தவர் சௌரப். கடந்த 2018-ம் ஆண்டு முதல் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
எந்தெந்த துறைகளில் பணிநீக்கம்:
வணிகம், விளம்பர விற்பனை, சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு மற்றும் கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் வந்த மெயில்:
”பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியான முதலே எங்களுக்கு தூக்கம் இல்லை. எப்போது, யார் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற பதற்றத்திலேயே கடந்த 2 மாதங்களாக சரியான தூக்கமின்றி தவித்தோம். இந்நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டதாக, நிறுவனத்தில் இருந்து எனக்கு மெயில் வந்தது” என பாதிக்கப்பட்ட ஒருவர் தனது லிங்க்ட் இன் பக்கத்தில் எழுதியிருந்தார். பலரும் தங்களது வேதனையை பகிர்ந்து வருகின்றனர்
21 ஆயிரம் பேர் பணிநீக்கம்:
மெட்டா நிறுவனம் இதுவரை 21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி, முதற்கட்டமாக 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதைதொடர்ந்து தற்போது இரண்டாவது கட்டமாக 10000 தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களது பணிகளை இழந்துள்ளனர்.
காரணம் என்ன?
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியை மெட்டா மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மெட்டா அதன் நிறுவன கட்டமைப்பை சமன் செய்யவும், செயல்பாடுகளை குறைக்கவும், உள் செயல்பாடுகளை மறுசீரமைக்கவும் மற்றும் ஆட்சேர்ப்பு விகிதங்களைக் குறைக்கவும் முடிவெடுத்துள்ளது. இதே காரணங்களால் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.