இந்தியாவில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பை நகரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனைப்பெற்று, பிறகு பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ, இந்நிலையில் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பியோடினர்.



 


இந்நிலையில் கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல முயற்சிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தது. ஆனால் குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் அந்நாட்டுடன் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மெகுல் சோக்சியை இந்தியா கொண்டுவருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது மெகுல் சோக்சி மற்றும் நிரவ் மோடி மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.    






மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு மெகுல் சோக்சிக்கு சி.பி.ஐயின் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் மெகுல் சோக்சி அந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. மெகுல் சோக்சியின் இந்த செயலை தொடர்ந்து ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை மெகுல் மீது பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம். கடந்த செவ்வாய் அன்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்சியை காணவில்லை என்று அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


அன்டிகுவா நாட்டில் இருந்து மெகுல் சோக்சியை நாடுகடத்தும் விஷயத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அந்நாட்டில் இருந்து அவர் காணாமல்போன விஷயம் தெரியவந்தது. இந்நிலையில் மெகுல் சோக்சி அன்டிகுவா நாட்டிற்கு அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிக்காவிற்கு படகு மூலம் சென்றபோது போலீசாரிடம் சிக்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டொமினிக்கா வழியாக கியூபா தப்பிச்செல்ல இருந்தது தெரியவந்தது. 




இதுகுறித்து டொமினிக்கா அரசு வெளியிட்ட பதிவில் 'டொமினிகாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மெகுல் சோக்சி தடுத்து வைக்கப்பட்டார். இவர் மீது இன்டர்போல் நிறுவனமும் ரெட் அலர்ட் வழங்கியுள்ளது. ஆன்டிகுவாவின் அதிகாரிகளுடன் டொமினிகா தொடர்புகொண்டுள்ளது. அவரை ஆன்டிகுவாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் டொமினிக்கா நாடு சிறையில் உள்ள மெகுல் சோக்சியின் முதல் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. டொமினிக்கா நாட்டில் இருந்து நேரடியாக அவரை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.