அமெரிக்காவில் கடந்த ஆண்டு யுஎஃப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் அதிகளவில் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக 2020ஆம் ஆண்டு மட்டும் 7க்கும் மேற்பட்ட முறை இந்த பொருள்கள் கண்டறிய பட்டத்தாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகே இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருக்கும் வீடியோ காட்சியை ஆவணப்பட இயக்குநர் ஜெரமி கார்பேல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் கடற்படை கப்பலை யுஎஃப்ஓ சூழந்த போது எடுக்கப்பட்ட வீடியோ. இதை அமெரிக்காவின் ஒமாஹா பகுதியிலுள்ள காம்பேட் தகவல் மையம் எடுத்தது. இது கப்பல் சான்டியாகோ கடல் பகுதியில் இருந்தப் போது எடுக்கப்பட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வீடியோவையும் அவர் பதவிட்டுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தொடர்பாக விசாரிக்க புலனாய்வு அமைப்பு குழு ஒன்றை அறிவித்தார். இந்தக் குழு இச்சம்பவங்கள் குறித்து தெளிவாக ஆய்வு செய்து யுஎஃப்ஓ தொடர்பான விஷயங்களையும், அவற்றின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றுடன் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்த அறிக்கையை சமர்பிக்க 180 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்தக் குழு தற்போது கடந்த 2020 டிசம்பர் முதல் தீவிரமாக தனது ஆய்வில் இறங்கியுள்ளது. இக்குழு வரும் ஜூன் மாதம் அதிபர் ஜோ பைடனிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த சம்பவங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கருதப்படுகிறது.
இது ஏலியன்களா, அல்லது மற்ற நாட்டின் அச்சுறுத்தலா என அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்