பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளில் உள்ள ஐந்து பெரும் எரிமலைகளில் ஒன்று தான் Mauna Loa. ஒரு எரிமலை உயிருடன் உள்ளதா என்பதை அறிய ஆய்வாளர்கள் பல தரநிலைகளை பின்பற்றுகின்றனர். ஒரு எரிமலையின் மேற்பரப்பின் கீழே உள்ள அதிசூடான நெருப்புக்குழம்பு ஒரு நிலையான சூழலில் இருக்கும்பட்சத்தில் அதை உயிருள்ள எரிமலை என்று கூறலாம் .
அதேசமயம் ஒரு எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நீராவி வெளியேறும் பட்சத்தில் அதையும் உயிருள்ள எரிமலை என்று கூறலாம். அந்த வகையில் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தற்போது உயிருடன் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை மௌனா லோவா தான். ஹவாய் தீவில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 13 ஆயிரத்து 680 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை இறுதியாக கடந்த 1984ம் ஆண்டு சீற்றம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
7 லட்சம் ஆண்டுகள் பழமையான இந்த எரிமலை கடந்த 1 லட்சம் ஆண்டுகளாக பலநூறு முறை வெடித்துள்ளது. குறிப்பாக கடந்த 1843-ஆம் ஆண்டுமுதல் சுமார் 30-க்கும் அதிகமான முறை இந்த எரிமலை சீற்றம்கொண்டுள்ளது.