தங்கள் நாட்டில் கொரோனா தொற்று இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என வடகொரியா தெரிவித்தது. உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவலை அந்நாடு தெரிவித்தது.
2019 டிசம்பர் மாதத்தில் சார்ஸ்-கோவிட்-2 பாதிப்புகள் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. இருப்பினும், சார்ஸ்-கொவி-2வின் முதல் மனித பாதிப்புகள் அக்டோபர் மத்தியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை தோன்றி இருக்கலாம் என்று முதல்கட்ட மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீனா, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷியா, தென்கொரியா , இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சீனா, ரஷ்யா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துக் கொண்டிருக்கும் வடகொரியாவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது. உலகில் 4-ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள வடகொரியா அணு ஆயுத நாடாகவும் விளங்குகிறது. உலக நாடுகளுடன் இருந்து தன்னை தனியாக துண்டித்து செயல்பட்டு வருகிறது.
வடகொரியாவில் நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை 23,121 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், யாருக்கும் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடோர் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளித்தார்.
முன்னதாக, கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட உலக பொது சுகாதார நெருக்கடியிலிருந்து தனது விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8-ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை தவிர்ப்பதாக வடகொரியா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.