நேபாளத்தில் லாம்ஜங் மாவட்ட மார்சியங்டி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப்பகுதியில் இன்று அதிகாலை 5:42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அனைவராலும் வெளியே வரமுடியவில்லை. பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்கள் மீட்டு அருகிலுள்ள லாம்ஜங் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி, 4.0 மற்றும் 5.3 ஆகிய இரண்டு நிலநடுக்கங்களும் மாவட்டத்தில் காலை 8:16 மற்றும் காலை 8:26 மணிக்கு பதிவாகியுள்ளன. மேலும் லாம்ஜங்கில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து காலை 10 மணிவரை சுமார் 20 சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் வீட்டின் தூங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் சிக்கி பாதி புதைந்த நிலையில் இருந்ததாகவும் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சுமார் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் அதிகாரி ஜகதீஷ் ரெக்மி தெரிவித்துள்ளார். மேலும் சேதமடைந்த வீடுகளில் பெரும்பாலும் மண்ணினால் கட்டப்பட்ட வீடுகள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதோடு லாம்ஜங்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்று மனாங், காஸ்கி மற்றும் கோர்காவிலும் நில அதிர்வு இன்று உணரப்பட்டது.
இதோடு நேபாளத்தின் வனப்பகுதியில் பூமிக்கு அடியில் வெறும் 1.3 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.9 பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நேபாளின் காப்தாட் தேசிய பூங்காவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கியது. இதனால் கிட்டத்தட்ட 9 ஆயிரம் பேர் உயிரிழந்ததோடு, கிட்டத்தட்ட 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதோடு மட்டுமின்றி காட்மண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 லட்சத்திற்கு அதிகமான வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.