கூண்டு சண்டைக்கான தேதிக்கு  எலான் மஸ்க் இன்னும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை என, மெட்டா உரிமையாளரான மார்க் தெரிவித்துள்ளார்.


கூண்டு சண்டை:


டெஸ்லா மற்றும் டிவிட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்கும், மெட்டா குழும தலைவரான மார்க் ஜுக்கபெர்க்கும் பெரும் பணக்காரர்கள் என்பதோடு சர்வதேச அளவில் முக்கிய பிரபலங்களாகவும் கருதப்படுகின்றனர்.  அரசியல் தொடங்கி செயற்கை நுண்ணறிவு வரை பல விவகாரங்களில் இருவரும் நேர் எதிர் கருத்துகளை கொண்டுள்ளனர். இருவருக்கும் இடையே வணிக விவகாரங்களிலும் நேரடி போட்டி நிலவி வருகிறது.  இந்த நிலையில் தான், ஜுக்கர்பெர்க்குடன் கூண்டில் சண்டையிட தயார் என எலான் மஸ்க் ட்விட்டரில் குறிப்பிட்டார். இதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி தந்த ஜுக்கர்பெர்க், "இடத்தை தேர்வு செய்து அனுப்பு" என கூறினார்.


நேரடி ஒளிபரப்பு:


கூண்டு சண்டைக்கு ஒருவரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. இதுதொடர்பான ஜுக்கர்பெர்க் மற்றும் மஸ்க் ஆகிய இருவருமே அவ்வப்போது சமூக வலைதளங்களில் கருத்துகளையும், அப்டேட்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், ஜுக்கர்பெர்க் உடனான கூண்டு சண்டை, x சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும்,  இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் என்றும் எலான் மஸ்க் அண்மையில் அறிவித்தார். இதனிடையே, சண்டை சிறியதாகவு இருந்தால் தான் வெற்றி பெற்று விடுவேன் எனவும், பெரியதாக இருந்தால் ஜுக்கர்பெர்க் வெற்றி பெறுவார் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.






எலான் மஸ்க்கை கலாய்த்து தள்ளும் மார்க் ஜுக்கர் பெர்க்:


மஸ்கின் அறிவிப்பு தொடர்பாக ஜுக்கர்பெர்க் தனது த்ரெட்ஸ் கணக்கில் இருந்து விளக்கமளித்துள்ளார். அதில், ”மஸ்க் உடனான கூண்டு சண்டையை ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடத்தலாம் என பரிந்துரைத்து இருந்தேன். ஆனால், தற்போது வரை அதனை அவர் உறுதி செய்யவில்லை. என்னால் காத்திருக்க முடியவில்லை. அதோடு, போட்டியை நேரடியாக ஒளிபரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்து இருப்பதால், எக்ஸ் செயலியை காட்டிலும் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான வேறு ஏதேனும் ஒரு தளத்தில் போட்டியை நேரலையில் ஒளிபரப்பலாமே” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


இதன் மூலம், எக்ஸ் தளம் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை என்பதை ஜுக்கர்பெர்க் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதனை, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.