வட அமெரிக்க கண்டத்தில் கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு குட்டி தீவு நாடு தான் ஹைதி. மக்கள் தொகை வெறும் 1.3 கோடி. சொல்லப்போனால் நம் நாட்டின் பெருநகரான மும்பையைவிட அளவில் பாதியுடைய சிறு நாடு. நாடு சிறிது ஆனால் பிரச்சனைகளோ பெரிது. ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்க நாடுகளின் காலனி ஆதிக்கத்திலிருந்த விடுபட்ட ஹைதியை இயற்கை கருணை காட்டாமல் அடிக்கடி புரட்டியது. நிலநடுக்கம், சூறாவளி, அரசியல் நிலையின்மை இந்த மூன்றும் மாறிமாறி ஹைதி மக்களை வதைக்கிறது. கடைசியாக நடந்துள்ள பெருந்துன்பம் என பட்டியலில் இணைந்துள்ளது அதிபர் ஜொவினல் மொய்சேவின் படுகொலை.


போராட்டமும் கொந்தளிப்பும் கொலையும்..


அதிபர் ஜொவினல் மொய்சே மீது ஆரம்ப நாள் முதலே ஊழல் புகார்கள் எழுந்துவந்தன. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமானதாகவே மாறியிருந்தது. இந்நிலையில்தான், அதிபர் மொய்சே பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை அறிவித்தார். இது மக்களை கடும் அதிருப்தியில் தள்ளியது. வெகுண்டெழுந்த மக்கள் தலைநகர் போர்ட் ஆவ் பிரன்ஸில் திரண்டனர். இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்தப் போராட்டம் தான் மொய்சே அரசுக்கு மிகக்கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அதிபரின் கொலை நடந்துள்ளது.


அதிபர் மொய்சேவையும் அவரது மனைவியையும் மர்ம நபர்கள் சிறைப்பிடித்தனர். மொய்சேவை கொலை செய்வதற்கு முன்னர் கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அவரைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரின் மனைவியைக் கடுமையாக தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். கூலிப்படையால் ஒரு நாட்டின் அதிபரையே சுட்டுக்கொல்ல முடிந்துள்ள இந்த சம்பவம் உலகின் சிறு நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.




ஹைதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதால், பதற்றத்தைக் குறைக்கவும், துறைமுகங்கள், விமான நிலையங்களைப் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. தங்களது பாதுகாப்பு வீரர்களை அனுப்புமாறு ஹைதி அரசு கேட்டுள்ளது. 


ஹைதியில் பொருளாதாரப் பின்னடைவு ஏன்?


ஹைதியில் கடந்த 10 ஆண்டுகளாகவே மாறி மாறி இயற்கை சீற்றங்கள் கோரத்தாண்டவம் ஆடியது. 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கமும், 2015ல் ஏற்பட்ட சூறாவளியும் ஹைதியை நிலைகுலையச் செய்தது. கடும் சூறாவளியும், நிலநடுக்கங்களும் ஹைதியை பாதித்திருந்த வேளையில் 2017ல் அதிபராக பொறுப்பேற்றார் மொய்சே (53). ஆனால், மக்கள் நலன் காப்பதைக் காட்டிலும் அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு சர்வாதிகாரியைப் போலவே அவர் நடந்துகொண்டார். அவருக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சியாளர்களுக்கு சாதகமாகிவிட்டன. போராட்டங்களை கிளர்ச்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து அங்கு வன்முறைக்குப் பஞ்சமில்லாமல் போனது.


2019-ஆம் ஆண்டு அங்கு அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும் ஆனால் அதனை நடத்தாமல் தவிர்த்தார் மொய்சே. 'நான் தாமதமாக பதவியேற்றுக்கொண்டதால், இன்னும் ஓராண்டுகள் என் பதவி தொடரும்' என்று அறிவித்து ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கினார். தனியார் விடுதியில் மனைவியுடன் தங்கியிருந்த அதிபரை கூலிப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அவரது உடலில் 12 இடங்களில் குண்டுகள் துளைத்துள்ளன. துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னரும் அவர் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று இடைக்காலப் பிரதமர் கூறியுள்ளார்.


ஹைதியின் இடைக்கால பிரதமராக கிளாட் ஜோசப் பதவியேற்றுள்ளார். அவரும் தன்னைத்தானே இடைக்காலப் பிரதமராக அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.