ஏதாவது வித்தியாசமாக, விநோதமாக நடந்தால்.. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்று காமெடியாகக் கேட்பதுண்டு. அப்படித்தான் இந்த செய்தியைக் கேட்டாலும் கேட்கத் தோன்றுகிறது.


சீன இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த தனது முன்னாள் காதலியின் கண்களைத் திறந்து அதன் மூலம் மொபைல் ஃபோனை இயக்கி, அவளது கைரேகைகளைப் பயன்படுத்தி ரூ.18 லட்சத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்றி திருட்டில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளம் பெண் ஹூவேய் ரக மொபைல் ஃபோனை பயன்படுத்திவந்தார்.


இந்தத் திருட்டுச் சம்பவம் மட்டும் கண்டுபிடிக்க முடிக்க முடியாமல் போயிருந்தால், ஒரு குறும்படமாக எடுக்கக் கூடிய அளவுக்கு மிகவும் சுவாரஸ்யமான கொள்ளைக் கதையாக இருந்திருக்கும். ஆனால், இந்தக் கதையில் குட்டு வெளிப்பட்டுவிட்டது. அதனால் குள்ளநரி மாட்டிக் கொண்டது.


கொள்ளை நடந்த கதை:


சீனாவின் நானிங் என்ற பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், தனது முன்னாள் காதலியிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டார் அந்த இளைஞர். கடந்த டிசம்பர் 2020ல் ஒரு நாள், டோங் என்ற குடும்பப் பெயர் கொண்ட அந்த இளம் பெண் சளித் தொந்தரவுக்காக மருந்து உட்கொண்டதில் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றார். அப்போது அங்கு வந்த அந்த இளைஞர், டோங்கின் கண்களைத் திறந்து அவரது செல்ஃபோன் லாக்கை நீக்கினார்.


பின்னர், டோங்கின் கைரேகையைப் பயன்படுத்து அலிபே ஆப் மூலம் தனது வங்கிக் கணக்குக்கு ரூ.18 லட்சம் பணத்தை அனுப்பிக் கொண்டார். இது குறித்து மறுநாள் காலையில் தனது ஃபோன் மெசேஜில் இருந்த குறுந்தகவலைப் பார்த்தே டோங் தெரிந்து கொண்டார். உடனடியாக போலீஸில் புகார் தெரிவித்தார்.


இந்த வழக்கில் அந்த இளைஞரை போலீஸார் எளிதாக கைது செய்தனர். அவர் ஒரு சூதாடி என்பதும், சூதாட்டில் பெரும் தொகையை இழந்த அந்த இளைஞர். தனது கடனை அடைக்கவே இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.


அந்த நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞருக்கு  20,000 யுவான் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவிலும் இதற்கு நிகராக ஒரு சம்பவம் நடந்துள்ளது. மிசோரி நகரில் 48 வயது பெண் ஒருவர் தனது 22 வயது மகளின் அடையாளங்களைத் திருடி அவரைப் போல் வாழ்ந்து வந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் மாணவியாக சேர்ந்த அவர், கல்விக் கடன், ஓட்டுநர் உரிமம் பெற்றதோடு இளைஞர்களையும் டேட் செய்துள்ளார்.


கொஞ்சம் அசந்தா ஆளையே வித்துருவாய்ங்க.. கதை இதுதான் போல!