பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இம்மாதிரியான கொடூரங்கள் அரங்கேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ரஷியாவில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி ஒருவரை கடத்தி சென்று, 14 ஆண்டுகளாக அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்த சம்பவம் கேட்கும்போதே மனதை பதற வைக்கிறது.


சிறுமியை கடத்தி சென்ற கொடூர சைக்கோ:


இந்த குற்றத்தில் ஈடுபட்டவரின் பெயர் விளாடிமிர் செஸ்கிடோவ். மேற்கு ரஷியாவில் செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள தனது வீட்டில் அந்த சிறுமியை 14 ஆண்டுகளாக அடைத்து வைத்திருந்திருக்கிறார் செஸ்கிடோவ். இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடத்தப்பட்டபோது, எகடெரினாவுக்கு 19 வயது. 


கடந்த 2009ஆம் ஆண்டு முதல், தான் அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்த காலக்கட்டத்தில் தான் 1000 முறைக்கு மேல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெரும் கொடூரத்திற்கு மத்தியில் வாழ்ந்த வந்த அவரை தப்பிக்க வைத்து, உதவி செய்திருப்பவர் குற்றம்சாட்டப்பட்ட செஸ்கிடோவின் தாயார் ஆவார்.


தன்னுடைய கொடூரமான அனுபவங்களை காவல்துறை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்ட அவர், "வீட்டு வேலைகளைச் செய்ய மட்டுமே படுக்கையறையை விட்டு வெளியே செல்ல அனுமதித்தான். கத்தி முனையில் வைத்து வீட்டு வேலைகளை செய்ய வைத்தான். சிறு பிரச்னைகளுக்கு எல்லாம் பலமுறை சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டேன்" என்றார்.


14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த கொடூரம்:


இதையடுத்து, 51 வயதான செஸ்கிடோவ், காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, ஸ்மோலினோ கிராமத்தில் உள்ள செஸ்கிடோவின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, பாலியல் பொம்மைகள், கட்டிப் போட பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் ஆபாச படங்கள் அடங்கிய சிடிக்கள் ஆகியவை காவல்துறையிடம் சிக்கியது.


கடந்த 2011ஆம் ஆண்டு, இவர், வேறோரு பெண்ணை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் எகடெரினா அளித்த வாக்குமூலத்தில், "மற்றொரு பெண் கைதியை செஸ்கிடோவ் வீட்டிற்கு அழைத்து வந்தார். 2011இல் சண்டையில் அவரை கொன்றுவிட்டார்" என்றார்.


அதை உறுதி செய்யும் வகையில், ரஷியாவின் விசாரணைக் குழுவின் உள்ளூர் கிளை செஸ்கிடோவின் வீட்டின் அடித்தளத்தில் மனித உடல்களின் எச்சங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் பேசுகையில், "19 வயதான எகடெரினாவை செஸ்கிடோவ் 2009ஆம் ஆண்டு சந்தித்தார். மேலும் அவர் வசித்த வீட்டிற்கு மது அருந்த அழைத்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள், எகடெரினாவை அந்த வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார்.


மனநோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்" என்றார்.