2 வயதில் தொலைந்துபோன தனது மகனை விடாமுயற்சியால் 22 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த பாசக்காரத் தந்தை ஒருவர்.


தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே


இந்தப் பாடலை இவருக்கு டெடிகேட் செய்யாமல் வேறு யாருக்கு அர்ப்பணித்தாலும், இவர் கண்டிப்பாக அர்ப்பணிப்புக்கு உரியவர். குவோ காங்டங் என்ற அன்புத் தந்தையின் கதையறிவோம்.


1997ஆம் ஆண்டு குவோ காங்டங் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்த காலம் அது. அவரது இரண்டு வயது மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிதுநேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. பதறிப்போன குவோ தெருவெங்கும் தேடினார். போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. குவோவும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. அன்று தொடங்கி மகனை அடையும் வரை அவர் அடைந்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.


இதுவரை சீனாவின் 20 மாகாணங்களில் அவர் தனது மகனைத் தேடி அலைந்துள்ளார். செல்லும் இடமெல்லாம் மகனின் சிறுவயது புகைப்படங்கள் தகவல் அடங்கிய பதாகையைக் கொண்டு செல்வார். சில நேரங்களில் பயணத்தின்போது எலும்பு முறிவு போன்ற விபத்துகளையும் சந்தித்துள்ளார். தன் சம்பாத்தியத்தின் சேமிப்பை எல்லாம் மகனைக் கண்டுபிடிப்பதற்காகவே பயன்படுத்தியுள்ளார். சில நேரங்களில் கையில் காசு இல்லாமல் போக கையேந்தியும் உள்ளார். எல்லாம் மகனைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஆசையில் தான். இவரது தேடல் மிகவும் பிரபலமாக சீனாவில் 2015ல் ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஆண்டி லாவ் நடிப்பில் ஒரு திரைப்படமே வெளியானது. 


இந்நிலையில்தான் குவோ தனது மகனைக் கண்டுபிடித்துள்ளார். சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் இருந்து மகனை மீட்டுள்ளார். மகனைக் கண்டதும் அவர் ஆரத்தழுவி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரபணு பரிசோதனையும் குவோ தான் தந்தை என்பதை உறுதிசெய்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குவோ, என் மகன் கிடைத்துவிட்டான். இனிதான் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் ஆரம்பிக்கவே போகின்றன என்றார். இந்தச் செய்தியை அறிந்த லாஸ்ட் அண்ட் லவ் படத்தின் நடிகரும் ஹாங்காங்கின் சூப்பர் ஸ்டாரும் லாவ், குவோவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழுக்கு லாவ் அளித்த பேட்டியில், சகோதரர் குவோவின் விடாமுயற்சியை நான் ரசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மகனுகாக குவோ 5 லட்சம் கிலோமீட்டர் பயணித்துள்ளார். இதுவரை 10 மோட்டார் பைக்குகளை மாற்றியுள்ளார். 20 மாகாணங்களில் தேடித் திரிந்துள்ளார். இன்று அதற்கான பலனை அவர் அனுபவித்துள்ளார்.


காணாமல் போன 20,000 குழந்தைகள்..
சீனாவில் குழந்தைக் கடத்தல் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. கடந்த 2015 எடுக்கப்பட்ட புள்ளிவரத்தின்படி சீனாவில் சராசரியாக ஆண்டுக்கு 20,000 குழந்தைகள் கடத்தப்படுகின்றன. திருட்டு, போதைப் பொருள் கடத்தலுக்குப் பின் சீனாவின் பிரதான குற்றமாக குழந்தைக் கடத்தல் இருக்கிறது. தனது மகனைத் தொலைத்த பின்னர் காணாமல் போன குழந்தைகளுக்கான அமைப்பின் முக்கிய முகமாக மாறியுள்ளார் குவோ.