சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


2019 டிசம்பர் இறுதியில் உலகம் 2020 புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஆனால், இயற்கையோ உலகுக்கு வேறு ஒன்றை தந்தது. ஆம், கொரோனா வைரஸ் டிசம்பர் 2019-இல் தான் சீனாவில் கண்டறியப்பட்டது. சீனாவின் வூஹான் மாகாணத்தின் இறைச்சிக் கூடத்திலிருந்து பரவியது என்று தான் ஆரம்பகட்டத்தில் இந்த வைரஸ் பற்றி சொல்லப்பட்டது. ஆனால், இன்று வரை கொரோனா வைரஸ்  எனப்படும் SARS Cov 22 வைரஸ் இயற்கையாகவே உருமாறி உருவானதா இல்லை வூஹானின் உயிரி ஆய்வுக் கூடத்திலிருந்து விபத்தாக வெளியேறியதா? இல்லை சதியா என்பது இன்னும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது


இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 12ம் தேதி அங்கு 29 பேருக்கு தொற்று உறுதியானது. பின்னர் ஜூலை 13-ஆம் தேதி 15 பேருக்கும் நேற்று ஜூலை 14-ஆம் தேதி 27 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92,000 கடந்ததுள்ளது. இதுவரை 4500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் மக்கள்தொகையை ஒப்பிடும்போது அங்கு கொரோனா பரவல் வெகுவாகக் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் கூட அண்மைக்காலமாக ஒருநாள் பாதிப்பு அதிகரித்து வருவது சீன அரசை கவலை அடையச் செய்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.


சீன வைரஸ் சர்ச்சையும் உலக சுகாதார நிறுவனம் வைத்த செக்கும்..


கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கியபோது அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இருந்தார். அவர், கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே அழைத்துவந்தார். இதனால், அமெரிக்கா சீனாவுக்கு இடையே வார்த்தைப்போர் மூண்டது. அப்போது குறுக்கிட்ட உலக சுகாதார நிறுவனமானது, சீன வைரஸ் என்று கூறி நோயை பொதுமைப்படுத்தக்கூடாது. கொரோனா வைரஸ் உருவானது தொடர்பான அறிவியல் ஆய்வுகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்று கூறி ட்ரம்புக்கு செக் வைத்தது. அதன்பின்னர் ட்ரம்ப், சீன வைரஸ் என்று சொல்வதை நிறுத்திக் கொண்டார்.


சில காலம் கழித்து கொரோனா வைரஸ் உருமாறியது. அப்போது லண்டன் வேரியன்ட், தென் ஆப்பிரிக்கா வேரியன்ட், பிரேசில் வேரியன்ட், இந்திய வேரியன்ட் என்றழைக்கும் பழக்கம் உருவானது. அதற்கும் உலக சுகாதார நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவினர் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், கப்பா, லாம்ப்டா என கிரேக்க அகர வரிசைப் பெயர்களை சூட்டியுள்ளனர்.